டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக 2-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்த சாதனையை படைத்துள்ளது.;
சிட்னி,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதனையடுத்து 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 157 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பண்ட் 61 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. வெறும் 6.2 ஓவர்களிலேயே அரைசதம் அடித்தது.
இதன் மூலம் டெஸ் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. முதலிடத்தில் இலங்கை (5.5 ஓவர்கள்) உள்ளது.
தற்போது நிதான ஆட்டத்தை கடைபிடித்து வரும் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் அடித்துள்ளது. வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.