டி20 கிரிக்கெட்; ஹசன் நவாஸ் அதிரடி சதம்... நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 105 ரன் (45 பந்துகள்) எடுத்து அசத்தினார்.;

Update:2025-03-21 17:04 IST
டி20 கிரிக்கெட்; ஹசன் நவாஸ் அதிரடி சதம்... நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

Image Courtesy: @TheRealPCB

ஆக்லாந்து,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மார்க் சாப்மேன் 94 ரன்கள் (44 பந்துகள்) எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் கண்டது. பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் முகமது ஹாரிஸ் 41 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து சல்மான் ஆகா களம் இறங்கினார். ஹசன் நவாஸ் - சல்மான் ஆகா இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது.

நிலைத்து நின்று ஆடிய இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். நியூசிலாந்து வீரர்கள் இந்த இணையை பிரிக்க முடியாமல் திணறினர். அதிரடியாக ஆடிய இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இறுதியில் பாகிஸ்தான் வெறும் 16 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 105 ரன்னும் (45 பந்துகள்), சல்மான் ஆகா 51 ரன்னும் (31 பந்துகள்) எடுத்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்