ரிக்கெல்டன் இரட்டை சதம்... முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.;
கேப்டவுன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 80 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரிக்கெல்டன் 176 ரன்களுடனும் , டேவிட் பெடிங்ஹாம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.பாகிஸ்தான் தரப்பில் சல்மான் ஆகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 615 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரிக்கெல்டன் 259 ரன், பவுமா 106 ரன், கைல் வெர்ரையன் 100 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் ஆகா, முகமது அப்பாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் பாகிஸ்தான் தற்போது வரை 12 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் 5 ரன், ரிஸ்வான் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர்.