பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா
ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.;
லாகூர்,
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜேசன் கில்லெஸ்பி அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 ஒருநாள் தொடர்கள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான டெஸ்ட் அணி நேற்று பாகிஸ்தானில் இருந்து புறப்படுவதாக இருந்தது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கில்லெஸ்பி தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது உதவி பயிற்சியாளர் டிம் நீல்சனின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வாரியம் புதுப்பிக்க மறுத்ததை அடுத்து, கில்லெஸ்பி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கில்லெஸ்பியுடன் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிறிஸ்டன் சமீபத்தில் அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.