சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணி அறிவிப்பு எப்போது..? வெளியான தகவல்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்க இன்றே கடைசி நாளாகும்.;

Update:2025-01-12 21:48 IST

மும்பை,

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ம் தேதிக்குள் (அதாவது இன்று) அறிவிக்க வேண்டும் என 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனிடையே இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களின் பட்டியலை தயார் செய்யவில்லை. பும்ரா உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளதால் தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வரும் 18 அல்லது 19-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜிவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். அன்றைய தேதிகளில் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு குழு கூட்டம் நடைபெற்று விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்