விராட் கோலி யார் என்பது அனைவருக்கும் தெரியும் - கிருணால் பாண்ட்யா
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்தது.
இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் 19 வீரர்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணியில் மொத்தம் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகா ஏலத்தில் ஆர்.சி.பி அணி தரப்பில் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிருணால் பாண்ட்யா ரூ.5.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நம் அனைவருக்கும் விராட் கோலி யார் என்பதும், அவர் என்ன செய்துள்ளார் என்பதும் நன்றாக தெரியும். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் மீதான அவரின் காதலும், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் அணியின் மற்ற வீரர்களுக்கும் எளிதாக பற்றிக் கொள்ளக் கூடியது.
அவரின் எனர்ஜி எப்போதும் பிடித்தமானது. அவரை போலவே எனக்கும் வெற்றி பெறுவது அதிகமாக விருப்பம். களத்தில் என்ன நடந்தாலும் இறுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பேன். சில நேரங்களில் அதுதான் நமக்குள் இருக்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். அதேபோல் இறுதியாக கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. தனிநபரின் சாதனையை விடவும் அணி வெற்றி பெறுவது முக்கியமாகும்.
அதேபோல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. ஆர்.சி.பி அணி குறித்து நான் அறிந்தது வரை, அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு கூடுதலாக ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.