3-வது டெஸ்ட்: கில், பண்ட் அரைசதம்.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற இந்தியா
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
மும்பை,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்களுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தரப்பில் கில் நிதானமாக விளையாட மறுமுனையில் பண்ட் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தார். இருவரும் அரைசதம் அடித்தனர். அதிலும் பண்ட் வெறும் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்த பின்னரும் அதிரடியாக விளையாட முயற்சித்த பண்ட் 60 ரன்களில் இஷ் சோதி பந்துவீச்சில் அவுட்டானார்.
கில் ஒருமுனையில் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் ஜடேஜா 14 ரன்களிலும், சர்பராஸ் கான் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வாஷிங்டன், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் நிலைத்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 90 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் சில பவுண்டரிகளை ஓட விட்டு அணி முன்னிலை பெற உதவினார். முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாட உள்ளது.