பண்ணையை சுற்றி மரங்கள் வளர்த்து 'உயிர்வேலி' அமைக்கும் வழிகள்
பண்ணை நிலத்தை சுற்றி வேலி அமைக்க எளிதான இயற்கை பாதுகாப்பு அரண்கள்தான் உயிர்வேலிகள். இந்த உயிர்வேலிகள் என்பது அடர்த்தியாக வளரும் தாவரங்கள் தான். இவை பாதுகாப்பானது மட்டுமல்ல. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும் ஆகும்.
வேலியாக உதவும் மரங்கள்
பொதுவாக, உயிர்வேலியாக பயன்படும் மரங்களாக பரம்பை முள், கிளுவை முள், நாட்டுக்கருவேலம், பனைமரம், கலாக்காய், சீகைக்காய், கொடுக்காப்புளி, இலந்தை, சவுக்கு என்று பல்வேறு மரங்கள் பயன்படுகின்றன.இவற்றை வேலியாக நட்டு வளர்க்கலாம். இந்த உயிர்வேலிகள் தற்சார்பு பொருளாதாரத்திற்கு வழி வகுக்கக்கூடியவை. மேலும், உயிர்வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்களால் நிலத்திற்குள் வரும் அதிகப்படியான காற்றை தடுக்கும் தடுப்பாகவும் அமைகின்றன. இதனால் பழமரங்கள், பயிர்கள், தென்னை, வாழை போன்ற பயிர்கள் காற்றால் சேதம் அடையாமல், கீழே சாய்ந்து விடமால் தடுக்கப்படும்.
பல்லுயிர் பெருக்கம்
இந்த வேலி தாவரங்கள் பல்லுயிர்களின் பெருக்கத்திற்கு உதவும் வாழ்விடமாகவும் அமையும். உயிர்வேலி தாவரங்கள் நிலத்தை சுற்றி அரணாக இருக்கும் போது பாம்பு போன்ற உயிரிகள் தோட்டத்திற்குள் தங்காமல் வேலி தாவரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஆந்தை, மயில்கள் இன்னும் பல பறவை இனங்கள் வேலி மரங்களில் கூடு கட்டி தங்குவதால் இந்த உயிர்வேலி சிறு சரணாலயமாகவும் செயல்படும்.
உயிர்வேலி அமைக்கும் போது அகழி எடுத்து, கரையை உயர்த்தி பின் உயிர்வேலி மரங்களை நட வேண்டும். இதனால், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லைப்பகுதிகள் முழுவதும் வளர்வதற்கு தகுந்தபடி குறைந்தது 10 அடி அகலம் இடைவெளிவிட்டு வளர்க்கலாம்.
உயிர்வேலி மரங்களால் சுற்றுப் புறத்தில் காற்று சுத்தமாகும். இந்த உயிர்வேலிகள் தேனீக்களுக்கு உணவும், வாழ்விடமாகவும் அமைகிறது. கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தையும் தருகிறது. பனை, சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் உயிர்வேலியில் இருக்கும்போது நமக்கான உணவையும், வீட்டு் தேவைகளுக்கு உண்டான மரப்பொருட்களையும் அளிக்கிறது.
பணத்தை மிச்சப்படுத்தலாம்
பண்ணைத் தொழில் முனைவோர் அதிக பணத்தை செலவழித்து கட்டுமானம், கம்பி வேலி அமைப்பதை விட இந்த உயிர் வேலிகளை அமைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.