வேலூர் சிப்பாய் புரட்சியும்... புனித யோவான் தேவாலயமும்...

Update: 2023-08-15 12:02 GMT

வேலூர் மாவட்டத்தின் அடையாளம் மற்றும் பெருமையாக அகழியுடன் கூடிய கோட்டை திகழ்கிறது. சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் காணப்படும் இந்தக் கோட்டை, 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக நவாப்புகள் ஆட்சிபுரிந்து வந்த வேலூர் கோட்டையை 17-ம் நூற்றாண்டின் கடைசியில் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1799-ம் ஆண்டு நடைபெற்ற 4-ம் மைசூர் போரில் சிறை பிடிக்கப்பட்ட திப்புசுல்தானின் குடும்பத்தினர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். கோட்டையை பாதுகாக்கும் பணியில் ஆங்கிலேய படையினரும், மெட்ராஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த தென்னிந்திய படைவீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.

ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் தென்னிந்திய படைவீரர்கள் மத அடையாளங்களை தவிர்க்க நெற்றியில் விபூதி, நாமம் பூசக்கூடாது. தாடி, மீசையை மழிக்க வேண்டும். விலங்குகளின் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் இருந்த 1,500 இந்து, முஸ்லிம் வீரர்கள் கொதித்தெழுந்தனர். அதன்தொடர்ச்சியாக 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி கோட்டையில் புரட்சி வெடித்தது. பல ஆங்கிலேய அதிகாரிகள் படுக்கையிலேயே கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களின் கவனச்சிதறலால் ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த ஆங்கிலேயர்களின் சிறிய குதிரைப்படை போரிட்டு 2 நாட்களில் வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது.

வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய் புரட்சி ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கோட்டை பாதுகாப்பை பலப்படுத்தவும், மீண்டும் இதுபோன்று புரட்சி ஏற்படாமல் தடுக்கவும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய ராணுவ வீரர்கள் வேலூர் கோட்டைக்குள் குடியமர்த்தப்பட்டனர். அவர்களில் பலர் குடும்பத்தினருடன் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்காக 300 பேர் அமரும் வகையில் 50 அடி நீளத்தில் 18 அடி அகலத்தில் 1846-ம் ஆண்டு தேவாலயம் கட்டப்பட்டது. உள்பகுதியில் 6 தூண்களை எழுப்பி மேற்கூரை அமைக்கப்பட்டது. இதனை கட்டுவதற்கு அப்போதைய இந்திய மதிப்பின்படி 5,589 ரூபாய் செலவானது. தேவாலயத்தின் உள்ளே சென்று வர 4 பகுதிகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவாலயம் கட்டி முடித்து ஓராண்டிற்கு பின்னர் லண்டனில் இருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள வெண்கல மணி கொண்டு வரப்பட்டு, தனியாக மணி கோபுரம் கட்டப்பட்டது.

தேவாலயத்தில் நடைபெற்ற திருமணம் விவரங்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள், ஞானஸ்தானம் பெற்ற குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் அளிக்க சுமார் ஒரு டன் எடையுள்ள ஒரே கல்லில் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஞானஸ்தான தொட்டி தற்போதும் தேவாலயத்தின் உள்பகுதியில் இருக்கிறது.

தேவாலயத்தின் ஆல்ட்டர் பகுதியில் உள்ள சுவற்றில் வட்டவடிவிலான கண்ணாடியில் ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட காட்சியும், அவரின் இடதுபுறத்தில் காவலரும், காலடியில் தாயார் மரியாளும், வலதுபுறத்தில் தயாரின் சகோதரி மகதலேனா மரியாளும் இருப்பது போன்ற கண்ணாடி ஓவியம் உள்ளது. இதனை வேலூர் மத்திய சிறையில் 20 ஆண்டுகளாக சூப்பிரண்டாக பணியாற்றியவரும், தேவாலய அறங்காவலருமான வில்லியம்ஸ் சிம் எம்.லியோட் நினைவாக அவருடன் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கியுள்ளனர். தேவாலயத்தில் உள்ள நாற்காலிகள், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து மரச்சாமான்களும் கலைநயத்துடன் செய்யப்பட்டுள்ளன.

1976-ம் ஆண்டு முதல் இந்த தேவாலயம் தென்னிந்திய திருச்சபை வேலூர் திருமண்டலத்தின் கீழ் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மட்டும் ஆராதனை நடைபெறுகிறது.

தென்னிந்திய திருச்சபையில் உள்ள தேவாலயங்களில் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே தேவாலயம் இதுதான். இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டு 177 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்