ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற துவரை சாகுபடி
தமிழகத்தை பொறுத்தளவில் சமையலில் துவரை முக்கிய உணவு தானியமாக விளங்குகிறது. துவரை நடவு மற்றும் பராமரிப்பு முறைகளை தெரிந்து கொண்டு பயிரிடுவதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
அதிக புரதம்
புரதச்சத்து அளிக்கக்கூடிய பயிர் வகைகளில் துவரை முதல் இடத்தை பெறுகிறது. துவரையில் குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு துவரையில் உள்ளது. மேலும் பி வைட்டமின்கள், தாது உப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.
"வாழையை வைத்து வழுக்கி விழுந்தவன் இருக்கான், துவரையை வைத்து துவண்டு போனவன் கிடையாது" என்ற பழமொழி உண்டு. ஏனென்றால், துவரை சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கிறது. துவரையில் லாபம் பெற சரியான சாகுபடி முறைகளை கையாள வேண்டும்.
விதை நேர்த்தி
துவரை பயிரிட ஆடிப்பட்டம் உகந்தது. இது செம்மண் நிலத்தில் நன்றாக வளரும். துவரையை தனிப்பயிராகவும், கலப்பு பயிராகவும், ஊடு பயிராகவும் பயிரிடலாம். துவரையில் கோ-6, வம்பன்-2, எல்.ஆர்.ஜி.-41, கோ-7,. ஏ.பி.கே.-1 ஆகிய ரகங்கள் உள்ளன. துவரை விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு விதைக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடேமோனஸ் புளுரோசன்ஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து ரைசோபியல் கல்சர் சி.ஆர்.ஆர் மற்றும் சி.பி.ஆர், பாஸ்போ பாக்டீரியா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரித்த ஜி.பி.ஆர் என்ற சூடோமோனஸ் ஒரு பாக்கெட் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
நாற்றங்கால்
துவரையில் நடவு செய்ய நீண்ட கால துவரை வகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானாவாரியாக அல்லது பாசன நிலையில் இம்மாதத்திற்குள் (ஆகஸ்டு) நடவு செய்ய வேண்டும். துவரை நடவு செய்வதற்கு தேவையான நாற்றங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். 6-க்கு 3 அங்குல அளவு மற்றும் 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பையில் நிலத்தின் மண், மணல் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றை 1:1:1: என்ற அளவில் நிரப்பி நீர் தேங்குவதை தடுக்க சில துளைகளை இட வேண்டும்.
குழித்தட்டு நாற்றங்கால் முறையில் குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்க்கழிவுகள் மற்றும் மணல் நிரப்பி விதைகளை விதைக்க வேண்டும். விதையை 0.2 சதவீதம் கால்சியம் குளோரைடில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதையை கடினமாக்க 7 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். கடினமான விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் மற்றும் 100 கிராம் ரைசோபியம் மற்றும் 100 கிராம் பாஸ்போ பாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை பாலித்தீன் பையில் 1 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.
பராமரிப்பு
விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30 முதல் 40 நாட்கள் பராமரிக்கப்பட்டு பின்னர் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்ய வேண்டும்.நல்ல தரமான துவரை பயிறு விதையானது 98 சதவீதம் சுத்த தன்மை, 9 சதவீதம் ஈரப்பதம் மற்றும் 75 சதவீத முளைப்பு திறனுடன் இருக்கும்.