கேள்வி: ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனிடம் தஞ்சம் அடைந்துவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்? (த.சத்தியநாராயணன், பட்டாபிராம், சென்னை-72)
பதில்: ஓ.பன்னீர்செல்வம் ஒரு புதுக்கணக்கு போடுகிறார். "கூட்டல்" கணக்குத் தான்.
கேள்வி: அரசியல்வாதிகள் அதிகம் பொய் சொல்வது எந்த விஷயத்திற்கு? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்: வாக்குகளை பெறுவதற்கு.
கேள்வி: திண்டுக்கல் மாணவி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது பற்றி? (சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்)
பதில்: 'சாதனைக்கு ஏழ்மையோ, குடும்ப சூழ்நிலையோ தடையாக இருக்கமுடியாது. கடின உழைப்பு அனைத்தையும் முறியடித்து விடும்' என்பதை நிரூபித்து இருக்கிறார்.
கேள்வி: நாம் சிலரிடம் காட்டும் மரியாதையை பயம் என்று எடுத்துக்கொள்கிறார்களே? (எஸ். நவீன்சுந்தர், முத்தரசநல்லூர், திருச்சி)
பதில்: பாவம்! மரியாதை என்றால் என்ன? பயம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் அவர்கள்.
கேள்வி: சுயமாக தொழில் தொடங்க என்ன செய்யவேண்டும்? (மு. சம்சுகனி, திரேஸ்புரம்)
பதில்: சந்தையில் எது தேவை? என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.
கேள்வி: அரசியல் நாகரிகம் என்றால் என்ன? (சிங் வின்சென்ட், நாகை)
பதில்: எதிர்க்கட்சி நபரையும் வணங்குவது, அவர்கள் வீட்டு இறப்புக்கு சென்று துக்கம் விசாரிப்பது.
கேள்வி: திருமண மேடையில் நின்று சொர்க்க வாசலுக்குள் நுழைந்த புதுமண தம்பதிகள், 6 மாதங்களுக்கு பின் விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசலில் நிற்கிறார்களே, அது ஏன்? (ஜி. ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)
பதில்: அவர்கள் நுழைந்தது சொர்க்க வாசலாக இருந்திருந்தால், நீதிமன்றத்துக்கு வழிகாட்டாது.
கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி பற்றி? (சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்)
பதில்: மனதை தொட்டது.
கேள்வி: தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவர்னர் ஆர்.என்.ரவி உன்னிப்பாக கவனித்து வருவது போல தெரிகிறதே? (மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)
பதில்: ஒவ்வொன்றையும் பூதக்கண்ணாடி வைத்துப்பார்க்கிறார்.
கேள்வி: 2047-ம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும்? (ப.ராமகிருஷ்ணன், அறந்தாங்கி).
பதில்: நிச்சயம் ஒரு வல்லரசாக இருக்கும்.
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டுக்கு கிடைத்த சிறந்த ஆளுமை என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன? (திரிசூலி, நாமக்கல்)
பதில்: திரிசூலி போல அவரது ஆதரவாளர்களுக்கு இருக்கும் இந்த கருத்தே அவருக்கு பெருமை.
கேள்வி: மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறதே, சீமான் என்ன செய்வார்? (மணலி மாறன், சென்னை)
பதில்: பல சவால்களை விட்டுள்ளார், பார்ப்போம்.
கேள்வி: ஆண்களிடம் சொல்லக்கூடாத ரகசியம் எது? (செல்வ ஜெயராணி, மேற்பனைக்காடு கிழக்கு)
பதில்: யாரையாவது ஏற்கனவே நேசித்து இருந்தால் சொல்லக்கூடாது.
கேள்வி: மக்கள் தொகையில் முதலிடம் நம் இந்தியா. இது பெருமை தானே? (திலகர் ஈஸ்வரன், சேலம்)
பதில்: நிச்சயமாக பெருமை தான். உழைக்கும் கரங்களுக்கு பஞ்சம் இல்லை.
கேள்வி: சில பெண்மணிகள் பகலிலும் நைட்டியுடன் வலம் வருகிறார்களே? (எச்.மோகன், தென்வடல், திருவாரூர்)
பதில்: 'நைட்'டியை, 'டே'ட்டியாகவும் நினைத்துக் கொள்வது தான்.
கேள்வி: பெண்களின் பலம் எது, பலவீனம் எது? (கே.ஆர்.உதயகுமார், பின்கட்டு, சென்னை-1)
பதில்: பல நேரங்களில் அவர்கள் பலமே பலவீனம் தான்.
கேள்வி: புதிய சட்டமன்ற கட்டிடத்தை ராஜ்பவனில் கூட கட்டலாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறாரே? (எஸ்.ராமதாஸ், புதுச்சேரி)
பதில்: அங்கு நிறைய இடம் இருப்பதை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார்.
கேள்வி: காதலுக்கு கண் இல்லை என்கிறார்கள். கண் இல்லாமல் காதல் மட்டும் எப்படி? (கே. நடராஜன், திருவண்ணாமலை)
பதில்: காதல் உருவ அழகால் ஏற்படுவது அல்ல; உள்ள அழகால் உண்டாவது என்பதை உணர்த்தவே அந்த பழமொழி.