பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
கேள்வி: மதுவால் ஏராளமான பெண்கள் விதவையாகி வருகிறார்களே... (சா.சொக்கலிங்கம், ரோஸ்மியாபுரம்)
பதில்: குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் மதுவுக்கு அடிமையாகியவர்களிடம் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
-----
கேள்வி: 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்கும் என்றும், 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளாரே... (நசீமா, பரங்கிமலை)
பதில்: பொருளாதார நிபுணர்களின் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது. இப்போதுள்ள வேகத்தை விட இன்னும் அதிக வேகம் வேண்டும்.
-----
கேள்வி: தர்ம சங்கடம் எது? (எம்.அசோக்ராஜா, திருச்சி)
பதில்: செய்யக்கூடாததை செய்ய நேரிடுவது தர்ம சங்கடம்.
-----
கேள்வி: யாருக்கு பொறுமை அவசியம்? (எம்.செந்தில்குமார், நெசப்பாக்கம், சென்னை)
பதில்: உலகில் பிறந்த எல்லோருக்கும் பொறுமை அவசியம்.
-----
கேள்வி: பேனா மன்னா, கோவையை பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்? (ஜான் பீட்டர், கோவை)
பதில்: குளுமையான, அமைதியான, பேச்சிலேயே பாசத்துடன் கூடிய மரியாதை கொண்ட மக்கள் வாழும் நகரம், கோவை.
-----
கேள்வி: அடுத்தவர் வளர்ச்சியை கண்டு என்னால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லையே... (சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி)
பதில்: உங்கள் பலம் எது? என்பதை முதலில் கவனியுங்கள். அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவனியே உங்களை அதிசயிக்கும்.
-----
கேள்வி: இன்றைய அரசியல்வாதிகள் நடிகர்களை விட நன்றாக நடிக்கின்றார்களே? (ஆர்.ரெங்கசாமி, வடுகப்பட்டி)
பதில்: உலகமே ஒரு நாடக மேடை என்பது அவர்கள் கூற்று.
-----
கேள்வி: கள்ளக்காதல், கள்ளச்சாராயம் இரண்டுமே ஆபத்து என்பதை அறிந்தாலும், அதை நோக்கியே செல்கிறார்களே? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)
பதில்: இரண்டிலுமே ஆபத்தான போதை இருக்கிறது என்பதை அறியாததால் தான்.
-----
கேள்வி: வீண் செலவு செய்யும் என் நண்பனுக்கு என்னஅறிவுரை கூறலாம்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்: செலவழித்தது போக மீதியை சேமிக்க வேண்டாம். சேமித்தது போக மீதியை செலவழியுங்கள். இது அமெரிக்க செல்வந்தர் வாரன் பப்பெட் அறிவுரை.
-----
கேள்வி: எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகிறார். ஆனால் கவர்னர் 17 மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்கிறார். இதை எப்படி பார்ப்பது? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: கவர்னர் அதே பேட்டியிலேயே பல்கலைக்கழக மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக சொல்லியிருக்கிறாரே.
-----
கேள்வி: 'அவங்க ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் சாகவில்லையா...' என்று சிலர் கேட்பது எப்படி இருக்கிறது? (மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி)
பதில்: அதைச்சொல்லி இதை நியாயப்படுத்த முடியாது.
-----
கேள்வி: 2026-ம் ஆண்டில் என்னை முதல்-அமைச்சராக்கினால் 150 வயது வரை வாழும் வித்தையை மக்களுக்கு கற்றுத்தருவேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளாரே... (பா.ஜெயபிரகாஷ், தேனி)
பதில்: மலையை தூக்கி என் தலையில் வையுங்கள். சுமந்து காட்டுகிறேன் என்கிறார்.
-----
கேள்வி: பக்குவப்பட்ட காதலுக்கு வயது எதுவாக இருக்கவேண்டும்? (சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்)
பதில்: காதலுக்கு வயதில்லை.
-----
கேள்வி: பேனா மன்னரே... உண்மை சுடும். பொய்... (பத்மா விசுவநாதன், ஏலகிரி)
பதில்: சுட்டெரித்து விடும்.
-----
கேள்வி: வலிகளில் சுகமானது எது? (புலவர் சங்கரலிங்கம், மதுரை)
பதில்: நிச்சயமாக பிரசவ வலி தான்.
-----
கேள்வி: தாகம், மோகம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? (ஆ. ரமேஷ் குமார், பாவூர் சத்திரம்)
பதில்: தண்ணீர் குடித்தால் தாகம் உடனடியாக தீரும். மனதில் காதல் பொங்கி வழியும்வரை மோகம் இருக்கும், மனைவி மீது...
-----
கேள்வி: அன்பினால் சாதிப்பது எது? அறிவினால் சாதிப்பது எது? (ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்)
பதில்: அன்பினால் சாதிப்பது நட்பு. அறிவினால் சாதிப்பது மதிப்பு.
-----
கேள்வி: வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யவேண்டும்? (மாணிக்கம், திருப்பூர்)
பதில்: உழைப்பும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் முன்னேற்றம் வெகு அருகில்தான் இருக்கும்.
-----
கேள்வி: மனிதன் எது எதற்கு அடிமையாககூடாது? (சோமசுந்தரம், கடலூர்)
பதில்: மது, மாது, சூது.
-----
கேள்வி: தெய்வீக காதல் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? (ஜி.ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)
பதில்: புனிதமான காதல், ஒருவரை ஒருவர் மனமாற நேசிக்கும் காதல் தான் தெய்வீக காதல்.
-----
கேள்வி: வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் முதலீடுகளால் நாடு மீண்டும் அன்னியர்களுக்கு அடிமைப்பட்டுவிடும் என்கிறார்களே... (முத்துராமலிங்கம், சிவகங்கை)
பதில்: யார் சொன்னது? தொழில் வளர்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்பு பெருகும்.