வினோத பழக்கங்கள்- நம்பிக்கைகள்
மேற்கத்திய நாடுகளில் 13-ம் நம்பர் அதிர்ஷ்டமில்லாத எண்ணாக கருதப்படுகிறது. ஜப்பானியர்களுக்கு 4-ம் நெம்பர் வேண்டாத எண்ணாக இருக்கிறது.
இந்த 195 நாடுகளில் அதிகபட்சமாக 54 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்திலும், 48 நாடுகள் ஆசியாவிலும், 44 நாடுகள் ஐரோப்பாவிலும் உள்ளன. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் 33. ஓசியானியா நாடுகள் 14. வட அமெரிக்காவில் 2 நாடுகள் இருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு விதமான கலாசார பண்பாடுகள், சடங்கு-சம்பிரதாயங்கள், மாறுபட்ட பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் உள்ளன. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், நம் நாட்டில் வாகனங்கள் சாலையின் இடதுபுறம் பயணிக்கும். வாகனங்களில் 'ஸ்டியரிங்' வலதுபுறம் இருக்கும். இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை, கென்யா, தென்அமெரிக்கா, ஜமைக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த பெரும்பாலான நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.
ஆனால் அமெரிக்கா, கனடா, நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் சாலையின் வலதுபுறம் பயணிக்கும். வாகனங்களில் 'ஸ்டியரிங்' இடதுபுறம் இருக்கும்.
பொதுவாக சூரியனை கடவுளாக கருதி வழிபடும் முறை பல நாடுகளில் உள்ளது. ஆதிகாலத்தில் மனிதன் குகைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்ந்தான். கூர்மையான கல், கம்பு ஆகியவற்றை பயன்படுத்தி பகலில் விலங்குகளை வேட்டையாடி தனக்கான உணவை தேடிக் கொண்டதோடு அவற்றிடம் இருந்து தன்னை பாதுகாத்தும் கொண்டான். ஆனால் இரவு வந்து இருள் சூழ்ந்ததும், மனிதனுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய பயமும் கூடவே வந்தது. இரவில் விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருந்தது.
இந்த நிலையில் இருள் விலகி பொழுது விடிந்து வெளிச்சம் தோன்றியதும் அவனுக்கு மீண்டும் நிம்மதியும், நம்பிக்கையும் வந்தது. இதனால் ஒளியை தரும் சூரியனை தன்னை காக்க வந்த கடவுளாக கருதி மனிதன் வணங்கத் தொடங்கினான். இப்படித்தான் சூரிய வழிபாடு தொடங்கியதாக நம்பப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நடைமுறைக்கு பின்னணியிலும் ஒரு காரணம் உள்ளது.
உணவு தேடுவதும், உயிரை பாதுகாத்துக் கொள்வதும்தான் முக்கியம் என்று இருந்த காலகட்டத்தில், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது மற்றவனிடம் ஆயுதம் இருக்கிறதா? என்ற பயம் இருவருக்குமே இருந்தது. ''பார் எனது கையில் ஆயுதம் எதுவும் இல்லை நாம் நண்பர்களாக இருப்போம்'' என்பதை உணர்த்தும் வகையில்தான் ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. யாரும் அறியாத காலத்தில் எப்போதோ தொடங்கிய அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.
ஆனால் சில பழக்க வழக்கங்கள் வினோதமாக இருக்கும். அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் எதுவும் இருக்காது. நம்பிக்கையின் அடிப்படையில் அத்தகைய பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லா நாடுகளிலுமே உள்ளது.
நம் நாட்டில்கூட வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்றும், பெண் தண்ணீர் குடத்துடன் (நிறைகுடம்) எதிரே வந்தால் நல்ல சகுனம் என்றும் கருதும் வழக்கம் உள்ளது. பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது வாசல் நிலையில் தலை இடித்துக்கொண்டால், சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு செல்வதை பார்த்து இருக்கிறோம்.
நம் நாட்டில் பெண்கள், புற்றில் பாம்புக்கு பால் வார்ப்பதை வினோத பழக்கமாக வெளிநாட்டினர் கருதுகிறார்கள்.
விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் அபார வளர்ச்சி கண்டுள்ள ஜப்பான் பாரம்பரியமிக்க தனது கலாசாரத்தையும், பண்பாட்டையும், காலம் காலமாக இருந்து வரும் பழக்க வழக்கங்களையும் பேணி பாதுகாப்பதில் சிறந்து விளங்குகிறது. இதனால் அந்த நாட்டில் இப்போதும் சில வினோத பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் உள்ளன.
மேற்கத்திய நாடுகளில் 13-ம் நம்பர் அதிர்ஷ்டமில்லாத எண்ணாக கருதப்படுகிறது. சில நாடுகளில் வீடுகளுக்கு கதவிலக்கத்துக்கு 13-ம் எண் வைப்பதை தவிர்த்து விடுவார்கள். ஓட்டல்களில் 13-ம் எண் அறை இருக்காது. வாகனங்களுக்கும் பதிவு எண் 13 வராமல் பார்த்துக் கொள்வார்கள். நம் நாட்டிலும் 13-ம் எண் பற்றி அப்படிப்பட்ட அபிப்பிராயம் உள்ளபோதிலும், மக்கள் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்வது இல்லை.
மேற்கத்திய நாடுகளுக்கு 13 ஆகாத எண்ணாக இருப்பது போல், ஜப்பானியர்களுக்கு 4-ம் நெம்பர் வேண்டாத எண்ணாக இருக்கிறது. நான்கு என்ற எண்ணின் உச்சரிப்பு, 'மரணம்' என்ற சொல்லை உச்சரிப்பது போல் இருப்பதால் அந்த எண்ணை ஜப்பானியர்கள் ராசி இல்லாததாக நினைக்கிறார்கள். குறிப்பாக 49-வது எண்ணின் உச்சரிப்பு ''சாகும் வரை வேதனையை அனுபவிக்கும் வகையில்'' இருப்பதாக கருதி அந்த எண்ணை மிகவும் வெறுக்கிறார்கள்.
இப்படி 4-ம் எண்ணை பற்றிய அச்சஉணர்வு இருப்பதால், அதை அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாததாக கருதி தவிர்த்து விடுகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு, ஆஸ்பத்திரி போன்ற பெரிய கட்டிடங்களில் 3-வது தளத்துக்கு அடுத்ததாக உள்ள 4-வது மாடியை ஐந்தாவது மாடி ஆக்கிவிடுவார்கள். அதாவது 4-வது மாடி இருக்கும். அதை 5-வது மாடி என்று அடையாளப்படுத்துவார்கள்.
இதனால் அங்குள்ள 'லிப்டு'களின் 'கண்ட்ரோல் பேனல்'களில் 4-வது எண் 'பொத்தான்' இருக்காது. இன்னும் சில கட்டிடங்களில் 40 முதல் 49 வரையிலான மாடிகளே இருக்காது. அதாவது 39-வது மாடிக்கு பிறகு 50-வது மாடி என்று கணக்கில் கொள்வார்கள். கார்களை நிறுத்தும் இடங்களில் 4-வது எண் பெயரில் இடம் ஒதுக்கப்படாது.
இதேபோல் சீனா மற்றும் தைவான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் 4-ம் எண்ணை அதிர்ஷ்டமில்லாததாக கருதி மக்கள் தவிர்க்கிறார்கள். 4-வது தளத்தை '3ஏ' என்று குறிப்பிடும் நடைமுறை சில நாடுகளில் உள்ளது. சீனா தனது போர் விமானங்களுக்கு பதிவு எண் வழங்கும் போது, அந்த எண் 4-ல் முடியாமல் பார்த்துக் கொள்கிறது
இதில் வேடிக்கையான இன்னொரு சமாச்சாரமும் உள்ளது. 2000-வது ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது அல்லவா? முதலில் இந்த போட்டியை சீனாதான் நடத்த விரும்பியது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த சீனா முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா 'கம்'மென்று இருந்துவிட்டது. ஆனால் அதன்பிறகு 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை அந்த நாடு பீஜிங் நகரில் நடத்தியது.
4 என்ற எண் வந்ததால்தான் சீனா 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பாமல் நான்கு ஆண்டுகள் காத்திருந்து, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. சீனாவில் 8 ராசியான எண்ணாக கருதப்படுகிறது.
இதேபோல் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களும் 4-ம் எண்ணை தவிர்த்து விடுகின்றன. சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான 'ஒன் பிளஸ்' நிறுவனம் தனது 3-வது மாடலுக்கு அடுத்து நான்காவது மாடல் போனை '3டி' என்ற பெயரில் வெளியிட்டு அதன்பிறகு 5-வது மாடலை வெளியிட்டது.
இப்படி நாலாம் எண்ணை பற்றிய அச்ச உணர்வையும், அதை தவிர்க்கும் மனநிலையையும் 'டெட்ராபோபியா' என்கிறார்கள்.
கிழக்காசிய நாடுகளில் 4-ம் நம்பர் துரதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுவது குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அங்கு கடந்த 25 ஆண்டுகளில் மரணம் அடைந்த ஆசிய நாட்டவர்களில் 13 சதவீதம் பேர் மாதத்தின் நான்காவது நாள் இறந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் மரணம் அடைந்த ஆசிய நாட்டவர்களில் 27 சதவீதம் பேர் இந்த நாளில் அதாவது 4-ந் தேதி இறந்ததாக கண்டறியப்பட்டது. இந்த தகவலை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ இதழ் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இதற்கு காரணம் ''4-ம் எண் 'ராசி'யா?'' என்று தெரியவில்லை.
பொதுவாக நம் நாட்டில் ஓட்டலுக்கு செல்வோரில் பலர் சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போது, சர்வர்களின் சேவையை பாராட்டும் வகையில் நல்லெண்ணத்தோடு அவர்களுக்கு சிறிது தொகையை 'டிப்சாக' கொடுப்பது வழக்கம். ஆனால் ஜப்பானை பொறுத்தமட்டில், இப்படி 'டிப்ஸ்' கொடுப்பதையும், பெறுவதையும் பெரிய அவமரியாதையாக கருதுகிறார்கள். அதற்கு பதிலாக நூடுல்சை ஆர்வத்துடன் விரும்பி நன்றாக உறிஞ்சி சாப்பிட்டால், அங்குள்ள சமையல்காரரை நீங்கள் பாராட்டுவதாக நினைத்து பெருமைப்படுவார்கள். சீனாவிலும் 'டிப்ஸ்' கொடுப்பது அவமரியாதையாகவே கருதப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் பாதங்களை உடலின் மரியாதை குறைவான பாகமாக கருதுகிறார்கள். இதனால் வீடுகளுக்கோ, ஓட்டல்களுக்கோ செல்லும் போது காலணிகளை கழற்றி வெளியே விட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்.
இங்குள்ள கிராமப்புறங்களில் புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபோகும் போது, அங்கு தங்களை தங்க அனுமதிக்குமாறு கெட்ட ஆவிகளிடம் வேண்டி கேட்டுக் கொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.
தாய்லாந்தில் உள்ள பழங்கால நகரமான லோப்புரியில் குரங்கை அனுமாராக கருதுகிறார்கள். இதனால் அங்குள்ள மக்கள் குரங்குகளுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
திங்கட்கிழமைக்கு மஞ்சள், புதன்கிழமைக்கு பச்சை என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிறத்தை ஒதுக்கி, அன்று அந்த நிறத்தில் ஆடை அணியும் வழக்கம் முன்பு தாய்லாந்து நாட்டு மக்களிடையே இருந்தது. ஆனால் இப்போது எல்லோரும் இந்த வழக்கத்தை பின்பற்றுவது இல்லை.
பரிசுப்பொருள் அடங்கிய பார்சலை பளபளக்கும் வண்ண காகிதத்தால் சுற்றி கொடுப்பது வழக்கம். என்ன நிற காகிதம் என்பது பற்றி நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் சிங்கப்பூரில் பரிசுப் பொருளை ஊதா, வெள்ளை, கருப்பு நிற காகிதங்களில் சுற்றி கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால், அந்த நிறங்களை மரணம் மற்றும் இறுதிச்சடங்குடன் சம்பந்தப்படுத்தி பார்க்கிறார்கள்.
தாய்லாந்தில் பரிசுப் பொருளை மஞ்சள் அல்லது தங்க நிற காகிதத்திலும், இந்தோனேசியாவில் சிவப்பு அல்லது தங்க நிற காகிதத்திலும் சுற்றிக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த நிறங்களை அதிர்ஷ்டம் தரும் நிறங்களாக அவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.
தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. ஊருக்கு நடுவில் இளவட்டக்கல் என்ற பெயரில் உருண்டையான ஒரு பெரிய கல் கிடக்கும். அந்த கல்லை ஒருவன் தூக்கி தோள் வழியாக பின்பும் வீசினால் அவனை பலசாலி என்று கொண்டாடுவார்கள். இதேபோல் சீறிப்பாயும் காளையை அடக்கும் வாலிபர்களையும் வீரன் என்று போற்றுவார்கள். இப்படிப்பட்ட வீரம் நிறைந்த இளைஞர்களை மணக்க கல்யாண சந்தையில் கடும் போட்டி இருக்கும்.
நம்மூரில் இப்படி என்றால் தென்னாப்பிரிக்க நாடான பிரேசிலில் வினோதமான ஒரு பழக்கம் உள்ளது. இங்குள்ள ஒரு பிராந்தியத்தில், வெளியுலகத்துடன் அதிக தொடர்பில்லாத 'சட்டேர் மாவே' என்ற பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்கள் சமூகத்தில் ஒரு சிறுவனுக்கு 13 வயது ஆகிவிட்டால் அவன் இளைஞனாகி விட்டதாக கருதி வினோதமான சடங்கு ஒன்றை நடத்துகிறார்கள். அவனை தனியாக காட்டுக்குள் அனுப்பி 'கோபக்கார புல்லட் எறும்பு' எனப்படும் ஒருவகை கொடிய எறும்புகளை பிடித்து வரச் சொல்கிறார்கள். சிறுவன் பிடித்து வந்ததும் அந்த எறும்புகளை இரு உறைகளுக்குள் போட்டு அதற்குள் அவன் கையை விடச் சொல்லி உறைகளை மூடிவிடுகிறார்கள். 10 நிமிடங்களுக்கு பிறகே உறைகளை அவிழ்த்து இரு கைகளையும் வெளியே எடுப்பார்கள்.
எறும்புகளின் கொடூரமான கடியை தாங்கிக் கொண்டு அவன் எப்படி சமாளிக்கிறான் என்று பார்க்கிறார்கள். அப்படி வலியையும், சோதனையையும் தாங்கும் சக்தி இருந்தால்தான் அவனால் கஷ்ட நஷ்டங்களை தாங்கி குடும்பம் நடத்த முடியும் என்று கருதி இந்த சடங்கு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அப்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படும்.
''இப்படி ராட்சத எறும்புகளின் கடியை தாங்கிக் கொண்டால்தான் நீ இளைஞன், உனக்கு கல்யாணம் நடக்கும்'' என்று நம்மூரில் சொன்னால் பலர் ''ஆளை விடுங்கடா சாமி'' என்று ஓடிவிடுவார்கள்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வட பகுதியில் காஸ்டிரில்லோ டி முர்சியா என்ற இடம் உள்ளது. இந்த ஊரில் 17-ம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு தோறும் குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குழந்தை தாண்டும் நிகழ்ச்சி என்ற ஒரு சடங்கு நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, பிறந்து ஒரு வயதான குழந்தைகளை ஊரின் மையப்பகுதியில் உள்ள மைதானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து பாய் விரித்து வரிசையாக படுக்க வைப்பார்கள். அப்போது, சாத்தான் உடை அணிந்த ஒருவர் ஓடி வந்து குழந்தைகளை தாண்டுவார். அதன்பிறகு மதகுரு, குழந்தைகள் மீது புனித நீரை தெளித்து ஆசீர்வதிப்பார். இதன் மூலம், குழந்தைகளின் ஆன்மா புனிதம் அடைவதாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
ஸ்பெயினில் புத்தாண்டு தினத்தன்று, அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டி 12 திராட்சை பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. 12 மாதங்களை குறிக்கும் வகையில் அவர்கள் இப்படி சாப்பிடுகிறார்கள்.
இங்குள்ள வாலன்சியா என்ற இடத்தின் அருகே, புத்தாண்டு தினத்தன்று சிவப்பு நிற உள்ளாடையை கழற்றி வீசிவிட்டு தெருக்களில் மகிழ்ச்சியுடன் ஓடும் வழக்கமும் உள்ளது. இதேபோல் இந்த நாட்டினர் மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் குட்டித்தூக்கம் போடுவதையும் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக சிவப்பு நிறம் எச்சரிக்கை, புரட்சி ஆகியவற்றின் அடையாளமான பார்க்கப்படுகிறது. ஆனால் தென்கொரியாவில் இதன் கதை வேறு.
தென்கொரிய நாட்டின் கலாசாரத்தில் சிவப்பு மையால் பெயர்களை எழுதுவது தவிர்க்கப்படுகிறது. இறந்தவர்களின் பெயர்களை மட்டுமே சிவப்பு மை பேனாவால் எழுதுகிறார்கள். உயிரோடு இருக்கும் ஒருவரின் பெயரை யாராவது சிவப்பு மை பேனாவால் எழுதினால், அவர் அந்த நபருக்கு ஏதாவது தீங்கு ஏற்படவேண்டும் அல்லது சாகவேண்டும் என்று விரும்புவதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
புத்தாண்டு தினத்தில் நாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் வாழ்த்து தெரிவிப்போம். நேரில் சந்திக்கும் போது கைகுலுக்கி வாழ்த்து கூறுவோம். ஆனால் டென்மார்க் காரர்கள் வித்தியாசமான முறையில் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அதாவது தங்கள் வீட்டில் பயன்படுத்தும் போது உடையும் பீங்கான் கோப்பை, கிண்ணம், கப் ஆகியவற்றை ஆண்டு முழுவதும் சேகரித்து வைக்கிறார்கள். புத்தாண்டு தினத்தன்று உடைந்த அந்த பீங்கான் பாத்திரங்களை எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு முன்பு வீசிவிட்டு வருகிறார்கள். சிலர் வீசுவதற்கு பதிலாக அமைதியாக வீட்டு வாசலில் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படி வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் புத்தாண்டில் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்றும், வளம் பெருகும் என்றும் நம்புகிறார்கள்.
ஏம்பா... உன் வீட்டு குப்பையை அடுத்தவன் வீட்டு வாசலில் வீசிவிட்டு வருவதுதான் வாழ்த்து தெரிவிக்கும் லட்சணமா? என்று கேட்கத் தோன்றுகிறதா?... விடுங்கள்... அன்பை பரிமாறிக் கொள்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி...
கவனமாக இல்லாவிட்டால், சில சமயங்களில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதில்கூட வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரஷியாவில் மஞ்சள் நிறத்தை உறவை பிரிக்கும் நிறமாகவும், ஏமாற்றத்தின் அடையாளமாகவும் கருதுகிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் யாரும் மஞ்சள் நிற பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது இல்லை.
நம் நாட்டில் மஞ்சள் மங்களகரமான நிறமாக கருதப்படுகிறது. ஆனால் ரஷியாவில் அது உறவுக்கு வேட்டு வைக்கும் நிறமாக பார்க்கப்படுகிறது.
ரஷியாவில் பெண்களை விட ஆண்களின் வாழ்நாள் குறைவாக இருப்பதால் பாலின விகிதாச்சாரத்தில் மாறுபாடு உள்ளது. ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் செப்டம்பர் 12-ந் தேதியை கருத்தரித்தல் நாளாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் அரசு பொதுவிடுமுறை அளிக்கிறது. அந்த தேதியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் அரசாங்கம் வழங்கும் பரிசு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிடும் போது உணவில் உப்பு குறைவாக இருந்தால் கேட்டு வாங்கி போட்டுக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எகிப்து நாட்டில் இது வில்லங்கமான விஷயமாக இருக்கிறது. நண்பர்கள், சக ஊழியர்களுடன் அமர்ந்து உண்ணும் போது, ''கொஞ்சம் உப்பு கொடுங்கள்'' என்று கேட்டால், உணவு சரியில்லை என்று விருந்து கொடுப்பவரை நீங்கள் அவமதிப்பதாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உப்பில்லை என்றாலும் சகித்துக்கொண்டு சாப்பிட்டு விடுவார்கள்
அதுசரி...சப்பென்று இருக்கிற சாப்பாட்டை எப்படி ருசித்து சாப்பிடுவது?... சரியான தண்டனைதான்...
குழந்தைகள் வளரும் பருவத்தில் பல் விழுந்து முளைக்கும். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் கிரேக்க நாட்டில் குழந்தைகளுக்கு பல் விழுந்தால் அதை தூக்கி வீட்டு கூரையின் மீது வீசும் வழக்கம் உள்ளது. அப்படி வீசினால் அந்த குழந்தைக்கு மறுபடியும் முளைக்கும் பல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும், வீட்டுக்கு அதிர்ஷ்ட தேவதை தேடி வருவாள் என்றும் நம்புகிறார்கள். என்ன மாதிரியெல்லாம் நம்பிக்கை இருக்கிறது!...
டாக்சியில் (வாடகை கார்) பயணம் செய்யும் போது, ஒருவர் மட்டும் என்றால் பின் இருக்கையில் அமர்ந்து வசதியாக பயணம் செய்வோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு நபர் மட்டும் என்றால் பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்வது தவறாக பார்க்கப்படுகிறது. அதாவது அந்த நபர் பகட்டாக நடந்து கொள்வதாக அந்த நாட்டு மக்கள் கருதுவார்கள். எனவே ஆஸ்திரேலியாவில் ஒருவர் மட்டும் டாக்சியில் சென்றால், அவர் டிரைவரின் அருகே முன் இருக்கையில் அமர்ந்தே பயணிப்பது வழக்கம்.
பின்லாந்து நாட்டில் சொங்காஜார்வி என்ற ஓர் ஊர் உள்ளது. இந்த ஊரில், கணவன்மார்கள் தங்கள் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் வினோதமான (அபாயகரமானதும்கூட) விளையாட்டு போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. மனைவியை குறிப்பிட்ட தூரம் தூக்கிக் கொண்டு ஓடி முதலில் இலக்கை எட்டி வெற்றி பெறும் சாதனை கணவருக்கு பரிசு வழங்கி கவுரவிக்கிறார்கள். பரிசு என்ன தெரியுமா? மனைவியின் எடை எவ்வளவோ, அதற்கு சமமான மதிப்பு கொண்ட 'பீர்' பரிசாக வழங்கப்படுகிறது.
19-ம் நூற்றாண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி, கடந்த 1992-ம் ஆண்டு முதல் உலக அளவிலான போட்டியாக நடத்தப்படுவதால். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாதாரண பீருக்காக இப்படி உயிரை பணயம் வைக்கும் தைரியம் எப்படித்தான் கணவன்மார்களுக்கு வருகிறதோ?... வென்றால் 'பீர்'; விழுந்தால்....? பாவம்...
பின்லாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தற்போது இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இப்படி உலகம் முழுவதும் பல வினோதங்களும், விசித்திரமான பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் உள்ளன.
திருமணத்துக்கு முன் அழுது பழகும் மணமகள்
திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமான திருமண சடங்குகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்...
• ஜெர்மனியில் திருமணத்தின் போது ஒரு வித்தியாசமான சடங்கு நடைபெறும். திருமண உடையில் இருக்கும் மணமக்களிடம் ரம்பத்தை கொடுத்து ஒரு பெரிய கட்டையை அறுக்கச் சொல்வார்கள். அப்போது மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். வாழ்க்கையில் கஷ்டநஷ்டங்கள் வரும் போது இருவரும் இணைந்து அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
• ருமேனியா நாட்டில் திருமணத்துக்கு முன் மணப்பெண்ணை அவரது தோழிகளும், உறவினர்களும் கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்துவிடுவார்கள். (சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான்!...)மணமகன் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து மணமகளை மீட்டு வருவார். அதன்பிறகு அவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெறும்.
• நம் நாட்டில் யார் மீதாவது எச்சில் துப்பினால் அது பெரிய அவமரியாதையாக கருதப்படும். ஆனால், கென்யாவில் வசிக்கும் மாசாய் இன மக்கள் திருமணத்தில் எச்சில் துப்புவது முக்கிய சடங்காக உள்ளது. அதாவது மணமகள் மணமேடைக்கு செல்லும் முன் அவளது உடையில் தந்தை எச்சில் துப்புவார். இப்படி துப்புவதன் மூலம் அவளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை அவர்களிடையே இருக்கிறது.
• திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும் போது சில மணப்பெண்கள் அழுவார்கள். அப்போது கண்கலங்கும் பெற்றோர் அவளை தேற்றி அனுப்பி வைப்பார்கள். ஆனால் சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் துஜியா என்ற பிரிவினரிடையே, திருமணத்தின் போது மணமகள் கட்டாயம் அழுதே ஆகவேண்டும் என்ற வழக்கம் உள்ளது. இதற்காக திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தினசரி ஒரு மணி நேரம் அந்த பெண் அழுது பழகுவாள். கூடவே சேர்ந்து அவளது அம்மாவும், பாட்டியும் அழுது அவரை உற்சாகப்படுத்துவார்கள். சரியாப் போச்சு!...
• திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுடன் மணமகள் நடனமாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கியூபா நாட்டில் மணமகளுடன் சேர்ந்து ஒருவர் நடனமாட வேண்டும் என்றால் அவரது உடையில் ஊக்கு மூலம் பணத்தை குத்த வேண்டும். இந்த பணம் திருமண செலவுக்கும், மணமக்களின் தேனிலவுக்கும் உதவும் என்பதால், இப்படி ஒரு பழக்கம் அங்கு உள்ளது.
• ஆஸ்திரேலியாவில் திருமணத்துக்கு வருபவர்களிடம் மணமக்கள் வீட்டார் ஒரு சிறிய கல்லை கொடுப்பார்கள். திருமணம் முடியும் வரை அதை கையில் வைத்திருக்கும் அவர்கள், பின்னர் அந்த கல்லை அங்குள்ள அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டுவிடுவார்கள். திருமணத்துக்கு வந்து வாழ்த்திய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், புதுமண தம்பதியர் கற்கள் நிரம்பிய அந்த கிண்ணத்தை பின்னர் தங்கள் வீட்டில் பார்வைக்காக வைப்பது அங்கு வழக்கமாக இருக்கிறது.
• பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் இணைந்து ஒரு ஆண் புறாவையும், ஒரு பெண் புறாவையும் பறக்கவிடுவார்கள். ஒற்றுமையான-அமைதியான வாழ்க்கையை வேண்டி இந்த சம்பிரதாய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆவிகளை பார்க்கும் சக்தி நாய்களுக்கு உண்டா?
ஜப்பானைப் போன்றே சீனாவும் தனது கலாசாரம், பண்பாடு, பழம் பெருமைகளை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. அதேசமயம் அங்கு மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சம் இல்லை. அதில் சில வினோத நம்பிக்கைகளை பார்ப்போம்...
•ஆண்கள் தாடி-மீசை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் வராது என்ற வலுவான நம்பிக்கை சீனாவில் உள்ளது. இதனால் அங்கு ஆண்கள் தாடி-மீசை வைத்துக் கொள்வது இல்லை.
•பொதுவாக வெண்மை சமாதானத்தின் அடையாளமாகவும், கருப்பு துக்கத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. ஆனால் சீனாவில் வெள்ளை நிறத்தை துக்கத்தின் அடையாளமாகவும், சிவப்பை மங்களகரமான நிறமாகவும் கருதுகிறார்கள். தாமரையை மங்களகரமான மலராக நினைக்கிறார்கள்.
•பச்சை நிறம் வளத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் சீனாவில் பச்சை நிற தொப்பி விசுவாசமற்ற மனைவியை அடையாளப்படுத்துவதாக விளங்குகிறது.
•வடக்கு நோக்கிய தலைவாசலுடன் வீடு கட்டினால் பண நெருக்கடியும், வாழ்க்கையில் சிக்கல்களும் வரும் என்று சீனர்கள் கருதுவதால், அங்கு அப்படி யாரும் வீடு கட்ட விரும்புவது இல்லை. வீட்டை பெருக்கும் போது வாசலை நோக்கி பெருக்காமல் மையப் பகுதியை நோக்கி பெருக்கி குப்பையை அள்ளி பின்வாசல் வழியாக கொண்டு சென்று வெளியே கொட்டுவார்கள். முன்வாசல் வழியாக சென்று குப்பையை கொட்டினால் அதிர்ஷ்டதேவதை வீட்டுக்குள் வரமாட்டாள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
•நீளமான நூடுல்ஸ் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது.
•நம் நாட்டில் துடைப்பத்தால் அடிப்பது அவமரியாதையாக கருதப்படுகிறது. ஆனால் சீனாவில், துடைப்பத்தால் ஒருவரை அடித்தால் அந்த நபர் அதிர்ஷ்டகட்டையாகி பல ஆண்டுகள் கஷ்டப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் யாரையும் துடைப்பத்தால் அடிக்கமாட்டார்கள்.
•சீனர்கள் மற்றவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக வழங்குவது இல்லை. அப்படி வழங்கினால் அந்த கடிகாரம் அவர்கள் நேரத்தை திருடி வாழ்நாளை குறைத்துவிடும் என்று நம்புவதே இதற்கு காரணம். இதேபோல் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பரிசாக வழங்குவதும் இல்லை. அப்படி வழங்கினால் உறவு அறுந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். (நெதர்லாந்து நாட்டிலும் இப்படி ஒரு நம்பிக்கை உள்ளது) இதேபோல் கைக்குட்டை, குடை ஆகியவற்றை பரிசாக வழங்கினாலும் உறவு முறிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
•ஒருவர் தன்னை விட 3 அல்லது 6 வயது குறைந்த பெண்ணை அல்லது 3 அல்லது 6 வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்ற நம்பிக்கையும் சீனர்களிடையே உள்ளது.
•இதேபோல் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட உடை, அறைக்கலன்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை அபசகுனமாக கருதுகிறார்கள்.
•எங்காவது வெளியிடங்களுக்கு சென்று தங்கும் போது அறையின் கதவை தட்டிவிட்டே பின்னர் திறந்து உள்ளே செல்வார்கள். இப்படி தட்டிவிட்டு செல்வதால், அங்கு ஏதாவது கெட்ட ஆவிகள் இருந்தால், அவை தங்கள் வருகையை உணர்ந்து வெளியேறிவிடும் என்று நம்புகிறார்கள்.
•ஆவிகளையும், அருவங்களையும் பார்க்கும் சக்தி நாய்களுக்கு இருப்பதாக சீனர்கள் கருதுகிறார்கள். இதனால், நாய் தொடர்ந்து ஊளையிட்டால் நிச்சயம் மரணம் நிகழும் என்று நம்புகிறார்கள்.
•கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சக்தி நாய்க்கறிக்கு இருப்பதாக சீனர்கள் கருதுவதால், அதை விரும்பி உண்ணுகிறார்கள். அங்கு நடைபெறும் 'யூலின் நாய்க்கறி விழா' 4,000 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.