- திட்டமதிப்பீடு ரூ. 206 கோடி
- 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவு
- 8 தளங்களுடன் பிரமாண்டம்
- அனைத்தும் டிஜிட்டல் மயம்
"தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இதற்கான பணிகள் நத்தம் சாலையில் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவு பெற்று உள்ளன. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும், இந்த வேளையில் கலைஞர் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் 3.56 ஏக்கர் பரப்பளவில், 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. நூலக கட்டிட நுழைவாயில் முன்பு கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு உள்ளே வருவதற்கு ஒரு நுழைவாயில், வெளியே செல்வதற்கு ஒரு நுழைவாயில் என 2 வாயில்கள் உள்ளன. உள்ளே வந்தவுடன் நூலக கட்டிடத்திற்கு செல்ல ஒரு மிகப்பெரிய நுழைவாயிலும், அங்குள்ள 2 மாநாட்டு கூடங்களுக்கு செல்ல தனித்தனி வாயில்களும் என மொத்தம் 3 வாயில்கள் அமைந்துள்ளன.
சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தளங்களுக்கும் மக்கள் எளிதாக சென்றடையும் வகையில் நகரும் படிக்கட்டுகள், லிப்டுகள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. இந்த நூலகத்திற்கு மக்கள் வந்து படித்து செல்வதற்கு எந்த வித கட்டணமும் கிடையாது. ஆனால் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிப்பதற்கு உறுப்பினராக வேண்டும். அதற்கு ரூ.300 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. நூலகத்தில் கேண்டீன் வசதி உள்ளது. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்தத்தில் 50 கார்களும், திறந்த வெளியில் 50 கார்களும், சுமார் 500 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி உள்ளது. நவீன கட்டிட கலை, டிஜிட்டல் வசதிகள், முழுவதும் குளிரூட்டப்பட்டவை என ஏராளமான சிறப்புகளுடன் தன்னகத்தே அமைத்துள்ள இந்த கலைஞர் நூலகம், தென்னகத்தின் களஞ்சியம்.
கீழ்தளம் (19,315 ச.அடி.)
• வாகன நிறுத்துமிடம் •நாளிதழ்கள் சேமிப்பு அறை •நூல் கட்டும் பிரிவு
தரைத்தளம் (32,656 ச.அடி)
• கலைக்கூடம் •மாற்றுத்திறனாளிகள் பிரிவு •மாநாட்டு கூடம் •முக்கிய பிரமுகர்கள் அறை
• சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு -1
• பல் வகை மாநாட்டு கூடம்
• உறுப்பினர் சேர்க்கை பிரிவு
• தபால் பிரிவு •சர்வர் அறை
முதல் தளம் (26,655 ச.அடி.)
• கலைஞர் பிரிவு
• குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்
• நாளிதழ்கள் பிரிவு
• குழந்தைகள் நூலக பிரிவு
• சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு - 2
• அறிவியல் உபகரணங்கள்
இரண்டாம் தளம்(29,655 ச.அடி.)
• தமிழ்நூல்கள் பிரிவு
மூன்றாம் தளம்(29,655 ச.அடி.)
• ஆங்கில நூல்கள் பிரிவு
• ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு
• தமிழ் நூல்கள் பிரிவு
நான்காம் தளம்(20,616 ச.அடி.)
• போட்டி தேர்வுகள்
ஐந்தாம் தளம் (20,616 ச.அடி.)
• அரிய நூல்கள் பிரிவு
• மின் நூலகம்
• பல்லூடகபிரிவு
• நூல்கள் பாதுகாக்கும் பிரிவு
• ஒலி-ஒளி காட்சியக பிரிவு
• மின்னுருவாக்க பிரிவு
• பார்வையற்றோருக்கான மின் நூல்ஒலி நூல் ஸ்டுடியோ
• நுண்பட அட்டை பிரிவு
ஆறாம் தளம் (20,616 ச.அடி.)
• ஆங்கில நூல்கள் இரவல் பிரிவு
• நூல் பகுப்பாய்வு
• நூலக நிர்வாக பிரிவு
• நூல்கள் கொள்முதல் பிரிவு
• பணியாளர் உணவருந்தும் அறை
நூலகத்தின் முதல் உறுப்பினர்
அண்ணா நூலகத்தை திறந்து வைத்த கருணாநிதி, அந்த நூலகத்தின் முதல் உறுப்பினர் ஆனார். அதே போல் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை முதல் உறுப்பினராக பதிவு செய்து கொள்வார் என தெரிகிறது. அதற்காக அவருக்கு கலைஞர் நூலகம் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.
அண்ணா நூலகம் கலைஞர் நூலகம்
உலகில் உள்ள சிறந்த நூலகங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால், அதில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன், அண்ணா நூலகத்தை கண்டுகளித்து விட்டு "உலகில் உள்ள பல நூலகங்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் இது போல் ஒரு பிரம்மாண்ட நூலகத்தை கண்டதில்லை" என்று பெருமைப்பட சொன்னார்.
அண்ணா நூலகத்தை கட்டி எழுப்பியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். அவர் அந்த நூலக திறப்பு விழாவில் பேசும் போது, அண்ணா புத்தகங்கள் மீது வைத்திருந்த தீராத காதல் தான், இந்த நூலகத்தை நாம் கட்டி எழுப்புவதற்கு நமக்கு உறுதுணையாக இருந்தது. மரணத்தின் போதும், ஒருவர் கையில் புத்தகத்தை வைத்திருந்தார் என்றால் அது அண்ணா தான். அவரை இரவு சந்திக்க சென்றாலும், அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும் என்று பெருமைப்பட பேசினார். அண்ணாவை போலவே, புத்தகத்தின் மீது தீராத காதல் கொண்டவர் கருணாநிதி. எனவே தான், அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூலகத்தை அமைத்திருக்கிறார்.
அண்ணா நூலகத்தை விட கலைஞர் நூலகம் கட்டிட அளவிலும், புத்தக எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கலைஞர் நூலகத்தின் வசதிகள் நவீன காலத்திற்கு ஏற்றபடி உள்ளது. இந்த இரண்டு நூலகங்களையும் நாம் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது தவறு. அண்ணா நூலகம், தலைநகரின் பொக்கிஷம். கலைஞர் நூலகம், தமிழ் நகரின் களஞ்சியம். இரண்டு நூலகங்களும் ஒட்டுமொத்த தமிழகத்தின் களஞ்சியங்கள் என்றால் அதுமிகையல்ல.
இனி சொல்லி அடிப்போம்
தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் தென்னகத்து மாணவர்கள் சோபிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் அறிவை வளர்த்து கொள்ள போதுமான வசதிகள் இங்கு இல்லை. மேலும் அதிக பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கும் நிலையும் அவர்களுக்கு இல்லை. இனி அந்த குறையை கலைஞர் நூலகம் போக்க போகிறது. எனென்றால் கலைஞர் நூலகத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே தனி பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு விலைமதிப்புமிக்க போட்டி தேர்வு புத்தகங்கள் அனைத்தும் இடம் பெற்று இருக்கும். அதோடு கடந்த போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கான வினாக்கள் புத்தகங்களும் இருக்கும். கலைஞர் நூலகம், போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு களஞ்சியம் என்றே சொல்லலாம். எனவே இனி வரும் காலங்களில் போட்டி தேர்வுகளில் தென்னக மாணவர்கள் சொல்லி அடிப்போம், வெற்றி பெறுவோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.
உலகுக்கு வழிகாட்டுகிறது `கலைஞர் நூலகம்'
நூலகம்
நூலகம் என்பது நூல்+அகம். நூல்கள் உள்ளே இருக்கும் இடம் என்பது தான் இதன் பொருள். ஆனால் கலைஞர் நூலகத்தை பொறுத்தவரை வெறும் நூல்கள் வைக்கும் ஒரு இடமாக அல்லாமல், தற்காலத்திற்கு ஏற்றபடி நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமைந்துள்ளது. கலைஞர் நூலகத்தை விட உலகில் சில நூலகங்கள் பெரியதாக இருந்தாலும், கலைஞர் நூலகத்தில் இருக்கும் சில வசதிகள் வேறும் எங்கும் இல்லை என்பது தான் அதன் சிறப்பு அம்சம். அதனால் தான் கலைஞர் நூலகம், நவீன உலகுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க போகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல்
கலைஞர் நூலகம் முழுவதும் டிஜிட்டல் வசதி கொண்டது. அங்கு நடைபெறும் பணிகள் முழுவதும் டிஜிட்டல் மயம் தான். உதாரணமாக கலைஞர் நூலகத்தில் இருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்லும் வசதி உள்ளது. அதற்கான நடைமுறைகள் அனைத்து டிஜிட்டல் முறையிலேயே நடைபெறும். உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம், நமக்கு வேண்டிய புத்தகத்தை எடுத்து அங்குள்ள எந்திரத்தில் ஸ்கேன் செய்து எளிதாக எடுத்து செல்லலாம். அது தவிர நமக்கு தேவையான புத்தகங்களை அலமாரி, அலமாரியாக தேட தேவை இல்லை. அங்குள்ள எந்திரத்தில் புத்தகத்தின் பெயர் அல்லது புத்தகத்தை எழுதியவரின் பெயரை பதிவு செய்தால், அந்த புத்தகம் எங்கு இருக்கும் என்பது தெரிந்து விடும். நூலகம் முழுவதும் வை-பை இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் பூங்கா
உலகிலேயே கலைஞர் நூலகத்தில் மட்டும் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு பெரிய நூலக பகுதியும், அறிவியல் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குழந்தைகள் தங்களது அறிவை வளர்த்து கொள்ள பல்வேறு அறிவியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. வெறும் புத்தகங்களில் மட்டுமே இதுவரை கண்டுவந்த அறிவியல் பொருட்களை மாணவர்கள் இனி நேரில் காணலாம். அதே போல் குழந்தைகள் நடப்பதற்காக ஒரு டிஜிட்டல் களம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நடக்கும் போகும் போது நாம் நீரின் மேல் நடப்பது போலவும், அதில் மீன்கள் செல்வது போலவும் இருக்கும். அதுமட்டுமின்றி அடர்ந்த காடு, பனிமலை போன்ற பல வடிவங்கள் மீது நாம் நடக்கும் உணர்வையும் ஏற்படுத்தலாம்.
பழமையான நூல்கள்
கலைஞர் நூலகத்தில் மிகவும் பழமையான நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தமிழ் ஆர்வலருக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். அதே போல் அரசு உடைமையாக்கப்பட்ட புத்தகங்கள், அரிதான புத்தகங்கள், மிகவும் பழமையான புத்தகங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் படித்து மகிழ 50 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
உலகில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் ஒரு சில நகரங்களில் மதுரைக்கும் இடம் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. தமிழகத்தின் அரசியல் தலைநகராகவும், தென்னகத்தின் நுழைவுவாயிலாகவும் மதுரை இருக்கிறது. எனவே மதுரையில் அமையும் இந்த நூலகம் மூலம் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள் அனைத்தும் பயன்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
மாற்றுத்திறனாளி
எந்த நூலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனிப்பட்ட பகுதிகள் இல்லை. ஆனால் கலைஞர் நூலகத்தின் தரைத்தளத்தில் மாற்று திறனாளிகளுக்கு தனி பகுதி ெதாடங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அங்கு தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை கேட்டு பெறலாம். அல்லது அவர்கள் வேண்டிய பகுதிகளுக்கு செல்ல சக்கர நாற்காலி வசதியும் உள்ளது. அவர்கள் நூலகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று வர வசதியாக சாய்வு தளவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
களவாட முடியாது
கலைஞர் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை, உறுப்பினர்கள் தங்களது கார்டினை ஸ்கேன் செய்து எளிதில் வெளியே எடுத்து செல்லும் வசதி உள்ளது. யாராவது ஸ்கேன் செய்யாமல் புத்தகத்தை களவாட நினைத்து அறையை விட்டு வெளியே எடுத்து சென்றால், அங்குள்ள அலாரம் சத்தம் எழுப்பும். அதோடு புத்தகத்தை களவாடியவரின் புகைப்படத்தை அங்குள்ள கேமரா பதிவு செய்து அதனை இ-மெயில் மூலம் மாவட்ட நூலக அலுவலருக்கு உடனடியாக அனுப்பி விடும்.
மூன்றாம் பாலினத்தவர்
மூன்றாம் பாலினத்தவர்களும், சமூகத்தில் அனைவருக்கும் இணையானவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக உலகிலேயே முதல் முறையாக அவர்களுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது கலைஞர் நூலகத்தில் தான். அவர்களும் நூலகத்திற்கு வந்து தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை செய்யப்பட்டு உள்ளது.