நமது மனம், நமது உரிமைகள்...! இன்று உலக மனநல தினம்

உலகம் முழுவதும் மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.

Update: 2023-10-10 08:23 GMT

ஒரு மனிதனுக்கு உடல் நலத்தைவிட மன நலம் மிகவும் முக்கியம் ஆகும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியம் இன்றியமையாதது. நமது உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியதுதான் மன நலம். மன அழுத்தத்தை கையாள்வது, மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் நமது விருப்பங்களை தேர்வு செய்வதற்கு மன நலம் முக்கியம். அதாவது, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனநலம் முக்கியமானது. மனநல பிரச்சினைகளை சந்தித்தால், சிந்தனை, மனநிலை மட்டுமின்றி நடத்தையிலும் பாதிப்பு ஏற்படும். எனவே, மன நலத்தை பேணி காப்பது அவசியமானது.

உலகம் முழுவதும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. 1990-களின் துவக்கத்தில் உலக மனநல கூட்டமைப்பு இந்த தினத்தை முறைப்படி உருவாக்கி அறிவித்தது. 1992ல் முதல் முறையாக உலக மனநல நாள் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு (2023) 'மனநலம் உலகளாவிய மனித உரிமை' என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், உலகம் முழுவதும் மன நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மனநல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள் என இந்த துறையில் பணிபுரியும் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பணிகளைப் பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், மனநல பராமரிப்பை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க இன்னும் என்ன செய்யவேண்டும்? என்பதைப் பற்றி விவாதிப்பதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும்கூட, உலகளவில் 8-ல் ஒருவர் மனநல பாதிப்புடன் வாழ்வதாகவும், இளம் வயதினருக்கு இந்த பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது.

இந்த தகவலை வெறும் புள்ளிவிவரமாக எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பாதிப்பு நாளாக நாளாக அதிகமாகி, ஒரு கட்டத்தில் அவர்களின் கல்வியை பாதிக்கும். மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையை விரும்பத் தொடங்குவார்கள். சிலருக்கு தாழ்வு மனப்பான்மையுடன் எதற்கெடுத்தாலும் பயம் உருவாகும். இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மனச்சிதைவினால் தற்கொலை எண்ணமும் உருவாகலாம்.

எனவே, இளம் வயதினரின் நடவடிக்கைகளில் குறிப்பிடும்படியான மாற்றம் தெரிந்தால் அவர்களுக்கு மனநல நிபுணர்கள் மூலம் உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்கவேண்டும். இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். குறிப்பாக நெருக்கமானவர்களின் அன்பும் அரவணைப்பும் தேவை.

Tags:    

மேலும் செய்திகள்