ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மருதநாயகம்

Update: 2023-08-15 11:21 GMT

வரலாறு போற்றும் மாவீரர்கள் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லை. அதேநேரம் மரணத்துக்குப் பிறகும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த மாவீரன் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர், மருதநாயகம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் உள்ள நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஒரு கல்வெட்டு வரலாற்று சின்னமாக திகழ்கிறது. அந்த கல்வெட்டு அமைந்துள்ள இடத்தில் தான் வரலாறு போற்றும் மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாஹிப்பின் கால்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மருதநாயகம் என்பவர், திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி மற்றும் பூலித்தேவனின் சமகாலத்தில் வாழ்ந்தவர். மருதுநாயகம், கான்சாஹிப், யூசுப்கான், மருதநாயகம், முகமது கான் சாஹிப் போன்ற பல பெயர்களில் இவர் அழைக்கப்பட்டார். இவர் மதுரை அருகே உள்ள பனையூரில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார். வீர, தீர சாகசங்களில் சிறந்து விளங்கினார்.

அவர் தனது முதல் ராணுவ அனுபவமாக, தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டு ஆட்சி புரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹனின் படையில் சிறிது காலம் பணி புரிந்தார். பின்னர் புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு படையில் சாதாரண படை வீரராக சேர்ந்தார். அவருடைய அறிவு, தலைமைப்பண்பு, போர் நுட்பம் ஆகியவை பிரெஞ்சு தளபதிகளை வியக்க வைத்தது. அதன் விளைவாக குறுகிய காலத்தில் பல முக்கிய பதவிகளை பெற்றார்.

இந்தநிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதில் கோபம் அடைந்த மருதநாயகம், ஆங்கிலேயப் படையில் இணைந்தார்.

ஆங்கிலேயர் படையில் இணைந்த சில காலத்திலேயே, 'மைசூர் சிங்கம்' என அழைக்கப்பட்ட ஹைதர் அலியை தோற்கடித்தார், மருதநாயகம். இதனால் தெற்கு சீமையின் கவர்னராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். மக்களை காப்பதிலும், அவர்களின் வாழ்வை உயர்த்துவதிலும், மருதநாயகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார். விவசாயம்தான் நாட்டின் உயிர்நாடி என்பதை உணர்ந்து, அதற்காக அனைத்து வகையிலும் பாடுபட்டார். ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கொடைக்கானலுக்கு முதன்முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் ஆட்சியில் தான். திறமையான ஆட்சியால் அவரை மக்கள் கொண்டாடினர்.

இவை எல்லாம், ஆற்காடு நவாப்பாக இருந்த முகமது அலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்கக்கூடாது என்று ஆற்காடு நவாப்பால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆற்காடு நவாப்பிடம் கப்பம் கட்டுமாறு மருதநாயகத்துக்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். இதனை மருதநாயகம் ஏற்க மறுத்தார். அதன்பிறகே, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை மருதநாயகம் உணர்ந்தார். அதன் விளைவு, நாட்டை நாமே ஏன் ஆளக்கூடாது? என்ற சிந்தனை மருதநாயகத்துக்கு உதித்தது.

1763-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு, தன்னுடைய மஞ்சள் நிற கொடியை ஏற்றினார். அத்துடன் பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் ஏற்றி பழைய நட்பை புதுப்பித்துக்கொண்டார். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மருதநாயகத்துக்கும் இடையே பகை முற்றியது.

மருதநாயகத்தை வீழ்த்த ஆங்கிலேயர்கள் 3 முறை படையெடுத்தனர். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் போரிட்டும் ஆங்கிலேயர் படை தோல்விகளையே தழுவியது. அவரை, வீரத்தால் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்களும், ஆற்காடு நவாப்பும், சூழ்ச்சியால் வீழ்த்த முயற்சித்தனர். அதன்படி, மருதநாயகத்தின் அமைச்சர் சீனிவாசராவ் உள்பட சிலரை கைப்பாவையாக்கினார்கள்.

1764-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி மருதநாயகம் தனது கோட்டையில் தனி அறையில் தொழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசராவ் உள்ளிட்டோர் மருதநாயகத்தை சிறைபிடித்து, ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைத்து விட்டனர். மருதநாயகத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு ஏற்பாடு செய்தது.

இதற்காக பிரமாண்டமான மாமரத்தின் கிளையில், வலுவான தூக்குக்கயிறு கட்டப்பட்டது. தண்டனையை நிறைவேற்றும் வகையில் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அப்போது மருதநாயகத்தின் உயிரை தூக்குக் கயிற்றால் பறிக்க முடியவில்லை. 2-வது முறையாக மீண்டும் தூக்கிலிடப்பட்டார். அசைவின்றி இருந்த அவர் இறந்து விட்டார் என்று கருதினர். ஆனால், அப்போதும் அவர் சாகவில்லை. 2 முறை தூக்கிலிட்ட போதிலும் உயிரை பறிக்க முடியாததால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற ஆங்கிலேயர்கள் சோர்ந்து போனார்கள். பின்னர் புதிய கயிறு தயாரிக்கப்பட்டு, 3-வது முறையாக தூக்கிலிடப்பட்டார். நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டு, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பிறகே உடல் இறக்கப்பட்டது.

தூக்கு தண்டனைக்கு பிறகு மருதநாயகத்தின் உடல் புதைக்கப்பட்டது. மருதநாயகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாக செய்தி பரவியது. இதனால் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து, 'உயிர் இருக்கிறதா?' என்று ஆங்கிலேயர்கள் பரிசோதித்து பார்த்தனர். பின்பு உடலை பல பாகங்களாக வெட்டி, பல இடங்களில் புதைத்தனர். அந்த வகையில், அவருடைய கால்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டன. தலை திருச்சியிலும், கைகள் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரை சம்மட்டிபுரத்திலும் அடக்கம் செய்யப்பட்டன.

இதுதொடர்பான கல்வெட்டு பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாசல் புதிய தோற்றத்தில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதனால், கல்வெட்டு வைக்கப்பட்ட பகுதியில் மண் குவிந்து கிடக்கிறது. பள்ளிவாசல் கட்டுமான பணி முடிந்தவுடன், மருதநாயகம் கால்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளனர். வரலாற்று நாயகன் மருதநாயகத்தின் கால்களை தேனி மாவட்ட மண் தாங்கி நிற்பதும் வரலாற்றின் சிறப்பு அங்கம் தான்.

Tags:    

மேலும் செய்திகள்