கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே சிவபுரா என்ற ஊர் உள்ளது. இங்கு ஒரு கோட்டையும், அதன் மீது படைவீரர்கள் நின்று கண்காணிப்பதற்கான 70 அடி உயர கண்காணிப்பு கோபுர மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரத்தை, கன்னட மொழியில் 'பத்தேரி' என்கிறார்கள்.
இந்த பத்தேரி 500 ஆண்டுகள் பழமையானதாகும். 15-ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் காலத்தில் இரண்டாம் தேவராயர் வராக சின்னத்துடன் கூடிய கொடியை இந்த கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏற்றியிருக்கிறார். அதன்பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் அந்த கோபுரத்தில் கொடியேற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். ஆரம்பத்தில் கொடியேற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கோபுரம், பின்னர் எதிரிகளை கண்காணிக்கும் கோபுரமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி நின்றால், ஸ்ரீரங்கப்பட்டணா நகரின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க முடியும். 1799-ம் ஆண்டு நடந்த போரின் போது ஆங்கிலேயரிடம் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஆங்கிலேய அதிகாரி கர்னல் கிரஹாம் கோட்டையில் உள்ள கோபுரத்தில் ஏறி பிரிட்டீஷ் கொடியை ஏற்றினார்.
சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள மக்களின் தேசிய உணர்வுகளை தட்டி எழுப்பியிருந்த நேரம் அது. போராட்டத்தின் ஒரு பகுதியாக 1938-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தேசிய கொடி ஏற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மீது ஆங்கிலேயர்கள் தடியடி நடத்தி, ஏராளமானவர்களை கைது செய்தனர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள சிவபுரா கோட்டை கோபுரத்தின் மீதும் தேசியக் கொடியை ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. 1938-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்தப் போராட்டம் நீடித்தது.
அதன் பிறகுதான் மைசூரு மாகாணப் பகுதிகளில், சுதந்திர தாகம் மக்களிடையே தீயாய் பரவியது. 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, தியாகிகள் பலரும் கோட்டை மீதுள்ள கோபுரத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றியே தீர வேண்டும் என்று முழக்கமிட்டனர். ஆனால் அப்போது ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் இந்திய தேசியக் கொடியை அந்த கோபுரத்தில் ஏற்ற முடியவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதும் அந்த பொன்னான நிகழ்வு இந்த இடத்தில் நடந்தது. அதுவரை மன்னர்கள், ஆங்கிலேயர்களின் கொடிகள் மட்டுமே பறந்த கோபுரத்தில், தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.
இந்த கண்காணிப்பு கோபுரத்தின் கோட்டைக்குள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் போராட்ட களப் படங்கள், வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. தற்போதும் சுதந்திர தினத்தன்று 70 அடி உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்தில் தேசியக்கொடியை ஸ்ரீரங்கப்பட்டணா தாசில்தார் ஏற்றி வருகிறார். மைசூரு மாகாணத்தில் சுதந்திர தின போராட்டத்திற்கு வித்திட்டு முக்கிய காரணமாக இருந்த கோட்டையும், கண்காணிப்பு கோபுரமும் தற்போது முறையான பராமரிப்பு இன்றி கிடந்து வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த கோட்டை மற்றும் கோபுரத்தை புனரமைத்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினருக்காக அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் ஸ்ரீரங்கப்பட்டணா மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.