சுதந்திரப் போராட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தியாகிகளின் பங்களிப்பு மகத்தானது. அந்த வகையில் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பாரந்தூரில், தேவய்யா என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார்.
சுதந்திரத்தைப் பெற அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அவர், தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியை தனது கிராமத்திற்கு அழைத்துவர விரும்பிய தேவய்யா, அவரை நேரில் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது விருப்பப்படி காந்தியடிகளும் பாரந்தூர் வர சம்மதித்தார்.
காந்திக்காக தனது நிலத்தில் ஒரு ஆசிரமத்தை கட்டிய தியாகி தேவய்யா, அந்த ஆசிரமத்திற்கு 'ஆனந்த ஆசிரமம்' என பெயர் சூட்டினார். மேலும் ஆசிரமம் அருகில் ஊஞ்சலும் கட்டினார். பாரந்தூர் வந்த காந்தியடிகள் 3 நாட்கள் அந்த ஆசிரமத்தில் தங்கினார். சுதந்திர தாகத்தை அந்தப் பகுதி மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 3 நாட்கள் காந்தி எழுச்சி உரையாற்றினார்.
அதன்பிறகு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாடு சுதந்திரம் அடைந்ததும், தியாகி தேவய்யா மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் அந்தப் பகுதியில் தெலுங்கு மொழியில் கல்வெட்டு ஒன்றை வைத்தார். அதில் 'வந்தே மாதரம், மகாத்மா காந்தி வாழ்க' என குறிப்பிட்டு, இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான '15.8.1947' என்ற தேதியும் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது சீரமைத்து பராமரிக்கப்பட்டு வரும் அந்த கல்வெட்டை பொதுமக்கள் பலரும் பார்த்து செல்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த 2 ஆண்டுகளில் தியாகி தேவய்யாவும் மறைந்தார். அவரது நினைவாக அந்த பகுதியில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.