குஜராத்தில் 80 கி.மீ. வேகத்தில் போகும்போது ஓடும் பஸ் கூரை மேல் ஏறி தமிழக சுற்றுலா பயணிகளின் பொருட்கள் கொள்ளை

Update: 2023-06-11 06:15 GMT

திருடராய் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது...

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேதான் இருக்குது...

இப்படி தான் இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும்... வெவ்வேறு விதமாக திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்குது...

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளில் ஏற்றி செல்லும் பொருட்களை நோட்டமிட்டு அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நெடுஞ்சாலைகளில் ஓடும் லாரிகளில் நடைபெறும் திருட்டு சம்பவத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்ட நெடுஞ்சாலை என்ற படத்தில், கதாநாயகன் ஓடும் லாரியின் பின்னால் வாகனத்தில் சென்று பின்னர் அந்த லாரியில் ஏறி திருடுவார்...

இதேபோல களவாணி படத்தில் உரமூட்டையை திருடும் நகைச்சுவை காட்சி வரும்...

இந்த சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு குஜராத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. கோவையில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற சுற்றுலா பஸ் 80 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் பஸ்சின் கூரையின் மீது ஏறி சுற்றுலா பயணிகளின் பைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-


ஆன்மிக சுற்றுலா

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இந்த ஆன்மிக சுற்றுலா 18 நாட்கள் ஆகும்.

இதன்படி ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகள் சுற்றுலா பஸ்சில் பயணத்தை தொடங்கினர். ஒவ்வொரு ஆன்மிக தலத்துக்கு சென்று திரும்பியபோது புதிய உற்சாகத்தை அடைந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 27-ந் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆன்மிக தலத்தை சுற்றி பார்த்தனர். பின்னர் வாரணாசி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்ப்பதற்காக குஜராத்தில் இருந்து அன்று இரவு புறப்பட்டனர்.

நாள் முழுவதும் கால் கடுக்க ஆன்மிக தலத்தை சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகள் அனைவரும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

பைகள் மாயம்

இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் டீ குடிப்பதற்காக சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

டீ குடித்துவிட்டு பஸ்சிற்கு திரும்பியபோது, மேற்கூரையில் போடப்பட்டிருந்த தார்ப்பாய் விலகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த டிரைவர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி பார்த்தார். அப்போது 10-க்கும் மேற்பட்ட பைகளை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் சுற்றுலா பயணிகள் தங்களின் பைகள் மாயமான செய்தி அறிந்து திடுக்கிட்டனர். அந்த பையில் ரூ.25 ஆயிரம் மற்றும் உடைமைகள் மற்றும் பல பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.

ஓடும் பஸ்சின் கூரையில் ஏறி கைவரிசை

வேகமாக வரும்போது, பஸ்சில் இருந்து பைகள் கீழே விழுந்திருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சின் பின்புறத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நள்ளிரவு 2 மணியளவில் 80 கி.மீட்டர் வேகத்தில் சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே வேகத்தில் பஸ்சிற்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறுகிறார். பின்னர் சிறிது நேரத்தில் சுற்றுலா பயணிகளின் 10 பைகள் பஸ்சில் இருந்து கீழே விழுகிறது. பின்னர் ஓடும் பஸ்சின் மேற்கூரையில் இருந்த அந்த நபர் மீண்டும் அந்த மோட்டார் சைக்கிளுக்கு தாவுகிறார். இந்த காட்சிகளை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீடியோ வைரல்

பைகள் திருட்டு போனதால் துணிகள், பொருட்கள், பணத்தை இழந்த சுற்றுலா பயணிகள் செய்வது அறியாமல் திகைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.

80 கி.மீட்டர் வேகத்தில் சென்ற சுற்றுலா பஸ்சில், மோட்டார் சைக்கிளில் வந்து 3 பேர் கும்பல் கைவரிசை காட்டிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்