நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது - ராகுல் காந்தி பேட்டி

மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2024-06-04 13:12 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தபின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்தன. கருத்துக் கணிப்பு நடத்திய பெரும்பாலான நிறுவனங்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தன.

இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. கூட்டணி 361 முதல் 401 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க. கூட்டணிக்கு சவால் அளிக்கும் வகையில் இந்தியா கூட்டணியும் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 294 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 231 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. பா.ஜ.க. மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம். மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. பிரதமர் மோடியை மக்கள் புறக்கணித்துவிட்டனர். விவசாயிகள், ஏழைகள், பட்டியலின மக்கள்தான் அரசியல் சாசனத்தை காப்பாற்றியுள்ளனர்.

2 தொகுதிகளிலும் நான் வெற்றி பெற்றுள்ளேன். ரேபரேலி, வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி. வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் எதை ராஜினாமா செய்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறோம், அவர்களைக் கேட்காமல் எந்த அறிக்கையும் வெளியிட மாட்டோம். நாளை நடைபெறும் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்