நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்: டெல்லி சூதாட்ட தரகர்களின் கணிப்பு

இந்தியாவில் தேர்தல் முடிவுகளில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது. சூதாட்ட தரகர்கள் மற்றும் பந்தயம் கட்டுவோரை போலீசார் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2024-06-03 10:50 GMT

புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. 543 உறுப்பினர்கள் கொண்ட கொண்ட மக்களவையில் பெரும்பான்மை பெற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே உள்ளன. பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சியை தங்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. கணிசமான வெற்றியை பெறும் என டெல்லி சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) கணித்துள்ளனர். பா.ஜ.க 340 இடங்களுக்கு மேல் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 200 இடங்களை பெறலாம் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

சூதாட்ட தரகர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் மதிப்பீடுகளின்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 341 முதல் 343 இடங்களைப் பெறலாம், இந்தியா கூட்டணி 198 முதல் 200 இடங்கள் பெறலாம் என்று சூதாட்ட நெட்வொர்க்கில் பணியாற்றும் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மட்டும் 310 முதல் 313 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் கட்சி 57 முதல் 59 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் முடிவுகளில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது. எனவே, சூதாட்ட தரகர்கள் மற்றும் பந்தயம் கட்டுவோரை போலீசார் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பையும் மீறி, பல்வேறு நிழல் தளங்கள் மூலம் சூதாட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்