ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்த விவகாரம்: முடிவுக்கு வந்த அண்ணாமலையின் வீடியோ சர்ச்சை

ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-03-30 03:48 GMT

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து அண்ணாமலை கூறுகையில், இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைபிடிப்பதில்லை என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்த துவங்கினர். இந்த நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போல் பரவிய வீடியோ, 2023 ஜூலையில் எடுக்கப்பட்டது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தேர்தல் விதிமுறை மீறலில் வராது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்