காவல் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம்

வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

Update: 2024-07-15 05:25 GMT

நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட்டு பல்வேறு இயற்கை சீற்றத்தை தணித்ததாக ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய காவல் தெய்வங்களுக்கு விழா எடுக்க சிறந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.

காவல் தெய்வம் என்பது ஒரு ஊரை காத்து வருகின்ற ஒரு சிறிய தெய்வம். காவல் தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயங்கள் எல்லாம் சிறியதாகவே இருக்கும். ஆனால் திருவிழாக்காலங்களில் அந்தப் பகுதியே களை கட்டும். அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே சிறப்பாக இருக்கும்.

 

தமிழ்நாட்டில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகின்ற காவல் தெய்வங்களில் முத்துமாரி அம்மன், ராக்காட்சி அம்மன், மாரியம்மன், திரவுபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு. பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்?

குறிப்பாக, மாரியம்மன் கோவில் இல்லாத ஊரை பார்ப்பது அரிது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன்தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது

தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சிணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும். ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் மாதமாகும்.

இன்னும் ஓரிரு தினங்களில் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில், அம்மன் கோவில்கள், காவல் தெய்வ ஆலயங்களில் திருவிழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஆடி மாதம் பல்வேறு வழிபாட்டிற்குரிய விசேஷ தினங்களை கொண்ட மாதம் என்பதால் வீடுகளில் சுப நிகழ்வுகளை குறைத்து அம்மன் வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு: https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்