300 ஆண்டு பாரம்பரிய பல்லவோற்சவம்.. திருப்பதி கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஆண்டுதோறும் பல்லவோற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

Update: 2024-07-18 11:12 GMT

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலையில் சுப்ரபாத தரிசனம் துவங்கி, ஏகாந்த சேவை வரை தினமும் பல உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர வாராந்திர உற்சவங்கள், மாதந்தோறும் நடக்கும் உற்சவங்கள், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சிறப்பு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, வெங்கடேஷ்வரர் நித்ய கல்யாண பெருமாள் என்பதால் இவருக்கு தினமும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு ஆண்டு முழுவதும் நடைபெறும் உற்சவங்களில் ஒரு சில உற்சவங்கள் குறித்து பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றில் ஒன்று மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடத்தப்படும் பல்லவோற்சவம். அதாவது, திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் ஆண்டுதோறும் பல்லவோற்சவம் என்ற பெயரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கன பல்லவோற்சவம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

பல்லவோற்சவ தினத்தன்று ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாக அளிக்கப்படும் மரியாதைகளை ஏற்றுக் கொள்வார். கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும், மைசூர் மகாராஜாவின் பிரதிநிதிகளும் சிறப்பு ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வரவேற்பார்கள். இந்த வைபவம் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

பல்லவோற்சவம் தவிர, ஒவ்வொரு மாதமும் மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் இரவு 7.30 மணியளவில் திருமலையில் சிறப்பு ஆஸ்தானம் நடத்தப்படுவது வழக்கம். யுகாதி, தீபாவளி, ஆனிவார ஆஸ்தானம் போன்ற நாட்களில் நடைபெறும் சிறப்பு ஆரத்தி மைசூரு மகாராஜாவின் பெயராலேயே நடத்தப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது நடக்கும் உட்லோட்சவ வைபவத்தின் போதும் மலையப்ப சுவாமி கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, கர்நாடக அரசின் மரியாதையை ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.

ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் பயன்படுத்தப்படும் தந்த பல்லக்கு, ஏராளமான நிலம் மற்றும் நகைகள், பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றை மைசூர் மகாராஜா நன்கொடையாக அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்