இன்று தேய்பிறை சஷ்டி: முருகன் அருள் பெற வாழைப்பழ தீபம் ஏற்றி வழிபடுங்கள்..!

சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், ஸ்லோகம் போன்றவற்றை சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது.

Update: 2024-07-26 07:54 GMT

முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியில் அனுஷ்டிக்கக்கூடிய விரதம் சஷ்டி விரதம் ஆகும். இதில் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என மாதத்திற்கு இருமுறை சஷ்டி திதி வரும். விரதம் இருந்து முருகனை வழிபடுவதற்கு சஷ்டி உகந்த நாளாக இருந்தாலும், தேய்பிறை சஷ்டி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் இந்த நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

இந்த நாளில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

குறிப்பாக தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் வாழைப்பழ தீபம் ஏற்றி முருகனை வழிபடுவது சிறப்பான பலனை வழங்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றி வழிபடுகிறார்களோ, அந்த வேண்டுதல் முருகன்பெருமான் நிறைவேற்றுவதாக நம்பிக்கை.

பொதுவாக தீராத பிரச்சனையில் தவிப்பவர்கள், திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருபவர் ஆகியோர் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், ஸ்லோகம் போன்றவற்றை சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது. உண்மையான பக்தியுடன், மனமுருகி முருகப்பெருமானை அழைத்து வேண்டுதலை சொன்னால் போதும், முருகப் பெருமான் அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.

விரதம் இருக்கும் முறை: உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு சஷ்டி விரதம் இருக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம். 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்