கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகனுக்கு நாளை பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.;
திருப்பரங்குன்றம்,
முதற்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகின்ற 14-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 முதல் இரவு 7.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு அக்னி வார்த்து சிறப்பு பூஜை நடக்கிறது.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் சிரசில் (தலையில்) கிரீடம் சூடியும், திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சாற்றுப்படி செய்து பட்டாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி பக்தர்கள் கோவிலில் குவிகிறார்கள்.
13-ந் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 கால் மண்டபம் வளாகத்தில் தேரின் அடிப்பாகத்தில் இருந்து சுமார் 25 அடி உயரத்தில் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு தேர் தயார்படுத்தும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 13-ந் தேதி மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட புதிய தாமிர கொப்பரை, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியிலான திரி ஆகியவை தயார்படுத்தப்பட்டு உள்ளது.கோவிலுக்குள் பெரிய மணி அடித்ததும் கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படும். இதே நேரத்தில் கோவில் மணியின் ஓசை கேட்டதும் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.