செவ்வாய் தோஷம் போக்கும் முருகப் பெருமான்

ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

Update: 2024-07-09 08:34 GMT

செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம். இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம், வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. செவ்வாய்க் கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.

கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்