கார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று நடக்கிறது.;

Update:2024-12-09 03:46 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று 6-ம் நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் பக்தர்கள் வெள்ளத்தில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து அருள் பாலித்தனர். மாட வீதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் பலர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பழமையான பெரிய ரிஷப வாகனம் 32 அடி உயரம் கொண்டது என்று கூறப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வரும் காட்சியை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தொடர்ந்து வெள்ளியானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதிஉலா நடக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்