வார விடுமுறை: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.;
திருத்தணி,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது
காலை முதலே மலைக்கோவிலுக்கு வெளியூர்களிருந்து வந்த சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுவழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல் ரூ.100 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.