வங்காளதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்: நீதிபதி பதவி விலக வலியுறுத்தல்

வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-08-10 08:28 GMT

Photo Credit: AP

டாக்கா,

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. இதனால் எழுந்த நெருக்கடியால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அவர், வேறுநாட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் ராஜினாமாவை தொடர்ந்து, வங்காளதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கையில் எடுத்தது.

தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமையும் வரை, நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் அறிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அந்த நாட்டு சட்டப்படி, வங்காளதேசத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாட்டை இடைக்கால அரசு வழிநடத்தும். எனவே இடைக்கால அரசை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கியது. அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில், மாணவ பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகித்தனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில்தான் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் மாணவ பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால அரசுக்கு தலைமை தாங்க முகமது யூனுசும் சம்மதம் தெரிவித்தார். ராணுவமும் அதை ஏற்றுக் கொண்டது. அதனை தொடர்ந்து, 84 வயது முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். நேற்று முன் தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனலும் வங்காளதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மாணவர்கள் போராட்டம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில், இன்று வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர். தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்