சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் பலி

மலைக் குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணி நேரம் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.;

Update:2024-06-07 17:20 IST

டார்குஷ் ,

சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . ஆதரவற்றோருக்கான பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்து, நேற்று ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு இறங்கி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்தது.

விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மலைக் குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணி நேரம் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்