லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
சென்னை பெரியமேட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சென்னை பெரியமேட்டில் மின்சாரம் தாக்கி பீகாரை சேர்ந்த அகமது சையது (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரியமேடு பகுதியில் கடை நடத்தி வந்த அகமது சையது, சுவிட்ச் போட்ட போது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
பாஸ்போர்ட் அலுவலகங்கள் நாளை இயங்காது என அறிவிப்பு
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை (அக். 16) இயங்காது என அறிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கரணையில் ஏரியைச் சுற்றி தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
தங்கு தடையின்றி ஆவின் பால்
தொடர் கனமழையிலும் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க சென்னையில் 8 இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன - மேயர் பிரியா
சென்னை மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்கள் மாநகராட்சிக்கு கைகொடுத்துள்ளன. வேளச்சேரியில் மட்டுமே முன்னெச்சரிக்கையாக படகுகள், மற்ற இடங்களில் தற்போது வரை தேவைப்படவில்லை. கால்வாயில் இருந்து தண்ணீர் மீண்டும் ரிவர்ஸ் ஆகாமல் இருப்பதை கண்காணித்து வருகிறோம். தொடர் மழையால்தான் சென்னையில் சில இடங்களில் மழைநீர் வடியவில்லை. முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் மோட்டார்கள் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னை ஐகோர்ட்டிற்கு நாளை விடுமுறை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனமழை காரணமாக சென்னை ஐகோர்ட்டிற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட்டிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரெயில்கள்.. என்ன அப்டேட்?
# தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ரெயில்கள் தாமதம் ஆகலாம்.
# வானிலை நிலவரத்தை பொறுத்து, ரெயில்கள் பகுதி நேரமாகவோ முழுவதுமாகவோ ரத்து செய்யப்படலாம்.
# பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தல்
சென்னை கொரட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.