லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்.. தத்தளிக்கும் சென்னை: புகைப்பட தொகுப்பு
தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை
சென்னையில் பொதுமக்களுக்கு பால் தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ள நிலையில் ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு
தொடர் மழை காரணமாக சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலையில் 260 கன அடியாக இருந்த செம்பரபாக்கம் ஏரியின் நீர்வர்த்து 1,080 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி கொண்ட ஏரியில் தற்போது நீர் இருப்பு 1,249 மில்லியன் கன அடி ஆக உள்ளது.
சென்னையில் கனமழை - அரசு ஊழியர்கள் முன்கூட்டியே செல்ல அனுமதி
சென்னையில் கனமழை பெய்து வருவதையொட்டி தலைமைச்செயலக அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டு செல்ல முன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு சுவர்
சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியது.அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் முழுவதும் விரிசல் அடைந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முழங்கால் வரை வெள்ளநீர் சூழ்ந்ததால் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வீடுகளில் சிக்கிய முதியவர்கள், பெரியவர்கள் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய துறைகள் வழக்கம்போல் இயங்கும். தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.