நாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-19 23:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (22ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது தொடர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நகர்ந்து சென்று பின்னர், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பி சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா-வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய உள்ளதாக கூறப்படுகிறது.

தாழ்வுப் பகுதி மீண்டும் சென்னைக்கு திரும்ப இருப்பதால், வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், "புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20 ம் தேதி) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் நாளை (டிச.21ம் தேதி) நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயர் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி நாளை மறுநாள் (டிச.22ம் தேதி) சென்னைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்