திருவண்ணாமலை மாவட்டம் நம்பியம்பட்டு அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இரவு முதல் பயணிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெஞ்சல் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், புதுச்சேரி அவசர கட்டுப்பாட்டு அறையில் மீட்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி தலைமைச்செயலாளர், உள்துறை சிறப்பு செயலாளர், டிஐஜி, பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர், செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புயல் இன்னும் கரையை கடக்கவில்லை - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் பெஞ்சல் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. இன்னும் கடலில்தான் நிலைகொண்டுள்ளது. இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்றும் திடீரென ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் சிவசங்கரை விழுப்புரத்திற்கும், செந்தில் பாலாஜியை மரக்காணத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் ஏற்கெனவே நிவாரண பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக ரப்பர் படகுகள் வைத்து மக்களை மீட்டு வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொளத்தூர் செல்வி நகரில் பொதுமக்களை சந்தித்த அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.
புதுச்சேரியில் மீண்டும் மழை
பெஞ்சல் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் புதுவை சாலைகள், தெருக்களில் ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. புதுச்சேரியில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே கரையை கடந்து ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பெஞ்சல் புயல் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரங்களில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து புயல் கரையை கடந்த உடன் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் சுமார் 45 சென்டிமீட்டருக்கு மேலாக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி மழை நீர் ஆனது தெருக்களில் பாய்ந்தது. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி வீணானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைகிறார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.