ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்

கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-09 14:23 IST

சென்னை,

வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா பேசியது தவறுதான். அது அவரது தனிப்பட்ட கருத்து.. கட்சியின் கருத்து அல்ல என்றும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் இன்று அறிவித்தார். தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதல்-அமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார்.

முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பலமுறை வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கிய பின்னரும் தொடர்ந்து பேசியதால் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் கருத்தால் வி.சி.க.வின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் தி.மு.க.விடம் இருந்து எந்த நெருக்கடியும் எங்களுக்கு வரவில்லை. எங்களது கொள்கை பகைவர்கள், வளர்ச்சியை விரும்பாதவர்கள் அதை வாய்ப்பாக பயன்படுத்தினர். விஜய் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழா குறித்து பல்வேறு சர்ச்சைகளை பரப்பினார்கள். நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் அம்பேத்கர் பற்றி பேசுங்கள் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் அறிவுறுத்தி இருந்தேன். விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்பது சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவு. வி.சி.க. மற்றும் த.வெ.க. இடையே எந்த மோதலும் இல்லை. விஜயோடு எந்த சர்ச்சையும் சிக்கலும் ஏற்பட்டது இல்லை" என்று அவர் கூறினார்.

பின்னர் வி.சி.க. ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா..? இல்லை திருமாவளவனின் கட்டுப்பாட்டில் உள்ளதா..? என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பா.ஜ.க. அதானி கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லை..? மோடி கட்டுப்பாட்டில் உள்ளதா..? என்று அவரிடம் கேளுங்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜுனா விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. பெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியை முதல்-அமைச்சரிடம் கொடுத்தோம்" என்று திருமாவளவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்