அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-01-13 14:48 IST

கோப்புப்படம் 

சென்னை,

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மாநிலத்தின் தலைநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என பெயரளவில் சொல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்