பொங்கல் பண்டிகை: வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
புகையிலை, மதுபானம் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.;
சென்னை,
பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள் பின்வருமாறு:-
சிறப்பு பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள், யு.பி.ஐ. மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்களுக்கும், பூங்காவில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் வகையில் கை வளையம் வழங்கப்படும், எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் 150 போலீசார் மற்றும் சென்னை, வேலூர், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 115 சீருடை வன ஊழியர்களும் 50 என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பார்வையாளர்களுக்காக மருத்துவ குழுவுடன் கூடிய சிறப்பு உதவி மையம் 4 அமைக்கப்படும் 4 மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படும். அவசரசூழலையும் கையாளும் வகையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் கிடைக்கும்.
பார்வையாளர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரம்பிய உணவு பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம். புகையிலை, மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பூங்கா பார்வையாளர்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரவும், பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.டி.ஒ. தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் வினியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனம் மற்றும் சபாரி வாகனம் வருகிற 15 மற்றும் 16-ந்தேதி அன்று நிறுத்தப்படும். 14-ந்தேதி அன்று திறன் அடிப்படையில் செயல்படும். நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு, இந்திய காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற அரிய வகை இனங்களில் சமீபத்தில் பிறந்தவை பார்வையாளர்கள் பூங்காவில் காணலாம்.
க்ரிபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் மற்றும் அனுமான் குரங்கு போன்ற சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க, வருகிற 15 மற்றும் மற்றும் 16-ந்தேதிகளில் மீன்வளம் மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா போன்ற மூடிய அடைப்புகள் மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.