ஆத்திரமூட்டும் கவர்னர் மாளிகை: முத்தரசன் கண்டனம்
முதல்-அமைச்சர் குறித்த கவர்னர் மாளிகையின் அறிக்கை ஆத்திரமூட்டுவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரை தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது அரசியலமைப்பு கடமையை செய்யாமல், பேரவையை விட்டு வெளியேறி, அநாகரிகமாக நடந்து கொண்டார்.
கவர்னர் உரையாற்றத் துவங்கும் முன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடுவதும், உரை நிறைவடைந்ததும் நாட்டுப் பண் பாடுவதும் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மரபாகும். வழிவழியாக அமைந்துள்ள இந்த மரபை உடைத்து, தமிழ் தாய் வாழ்த்து பாடும் முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என கவர்னர் அடாவடியாக வலியுறுத்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதை நாடுமுழுவதும் காண நேர்ந்தது. இருப்பினும், கவர்னர் உரையை, சபாநாயகர் அவைக்கு வாசித்தளித்தார்.
இதனையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் உரையாற்றி, தீர்மானம் நிறைவேற்றி, அவையின் மரபையும், மாண்பையும் பாதுகாத்துள்ளது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர், வழங்கிய பதிலுரை கவர்னர் நடந்து கொண்டதை குறிப்பிடும்போது "பகைவனுக்கும் அருளும்" உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கவர்னர் மாளிகை "முதல்-அமைச்சர், அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர், மதிக்காதவர், ஆணவம் கொண்டவர் என மனம் போன போக்கில் அவதூறு மூட்டைகளை அவிழ்த்து கொட்டி, இழிவுப்படுத்தி சுய மகிழ்வு கண்டிருக்கிறது. கவர்னர் மாளிகையில் அநாகரிக அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.