ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் எப்போது? - அமைச்சர் முத்துசாமி பதில்
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.;
ஈரோடு,
ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் மேலும் 3 பேர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தனர். 4 பேரும் சரி சமமாக இந்த இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள். ஒருவருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள். திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அதை மதிக்கிறோம்.
வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்வார். தேர்தல் விதிமுறைகளை 100 சதவீதம் கடைபிடித்து, கூட்டணி கட்சி மூலம் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளோம். இந்த தேர்தலில் திமுக 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளார். இதனால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. கடந்த தேர்தலில் யாரையும் பட்டியில் அடைக்கவில்லை. அவர்களே விருப்பப்பட்டு தான் வந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.