சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கம் - போலீசார் தகவல்

சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-01-13 20:49 IST

சென்னை,

தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு 'சைபர் கிரைம்' உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 875 அழைப்புகள் வந்தது. இதில் நிதிமோசடி குறித்து 34 ஆயிரத்து 392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் மோசடி சம்பவங்களில் மக்கள் இழந்த ரூ.1,673.85 கோடியில் ரூ.771.98 கோடி முடக்கப்பட்டது. 

இதில் ரூ.83.34 கோடி பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 34 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19,359 போலி சிம்கார்டுகள், 54 போலி இணையதளங்கள் உள்பட பல மோசடி தளங்கள் முடக்கப்பட்டன.

ஆபரேஷன் "திரை நீக்கு" நடவடிக்கை மூலம் கடந்த டிசம்பர் 6 முதல் 8-ந்தேதி வரையில் தமிழகத்தில் 76 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும் வருகிற 29-ந்தேதி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள வி.பி.சிங் சிலையில் இருந்து போர் நினைவிடம் வரை சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்