அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.;
மதுரை,
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும்.
அதன்படி, நாளை(செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் அவிழ்த்து விடும் இடம், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள், போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை இருபுறங்களிலும் கட்டைகள் வைத்து பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் என அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளை அவிழ்த்து விட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள், காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 100 முதல் 200 வரை உள்ள டோக்கன்கள் உள்ளவர்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இதுபோல் அடுத்தடுத்து ஒவ்வொரு 100 டோக்கன்கள் பெற்றவர்கள், அடுத்தடுத்த ஒரு மணி நேரத்திற்குள் என மாலை 4 மணி வரை 1100 டோக்கன்கள் பெற்றவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்-அமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதைபோல ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல் முறையாக டிராக்டர் பரிசு வழங்கப்பட உள்ளது.