வாரிசு வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரி கைது
வாரிசு வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.;
சேலம்,
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், அவரது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனை சந்தித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது செல்போனில் கண்காணிப்பாளர் பேசியதை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அந்த ஆதாரத்துடன் இளம்பெண், இது தொடர்பாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்் அந்த பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.