கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.;
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் சூழலில், கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வுகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.
இதன்படி சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும். மேலும் தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில், "பொங்கல் விழாவுக்காக கேந்திரிய வித்யாலயா தேர்வுத் தேதிகளை மாற்றக்கோரிய எனது கடிதத்திற்கு தரப்பட்டுள்ள பதில்; கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), சென்னை பிரிவு, பொங்கல் திருவிழா நாட்களில் தேர்வுகள் நடக்காமல் இருக்க தேர்வு தேதிகளை மாற்றியமைத்திருக்கிறது.
தேர்வுகள் முதலில் ஜனவரி 13, 2025 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தேதி மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தேன். அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் தந்துள்ளது.
கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை விரைவாக செய்த கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு நன்றி. மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.