ஈரோடு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.;

Update:2025-01-13 15:58 IST

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடக்கிறது. பொது பிரிவு வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் 'டெபாசிட்' தொகையாக செலுத்த வேண்டும்.

நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை தினம். இதனால் 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. - 2ம் நாளில் 9 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ராஜசேகர், நூர் முகமது, கோபாலகிருஷ்ணன், முகமது கைபீர், தர்மலிங்கம், தனஞ்செயன், இசக்கிமுத்து, ஆனந்தன், பானை மணி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் மனு செய்த 3 பேருடன் சேர்த்து ஈரோடு கிழக்கில் இதுவரை 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் 3-வது நாள் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி, சித்தோட்டில் உள்ள அரசினர் என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்