விருதுநகர்: காரியாபட்டியில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து
காரியாபட்டியில் கழிவு அட்டைப் பொருட்கள் மீது பட்டாசு விழுந்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;
விருதுநகர்,
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, பல்வேறு விதமான பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.