கிருஷ்ணகிரி: அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சுற்றிலும் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடவிசாமிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. மேய்ச்சலுக்கு சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், சுற்றி திரிந்த தெருநாய்களையும் கடித்து கொன்று வந்தன. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் கூண்டின் முன்புறம் ஆடு ஒன்றை கட்டி வைத்து சிறுத்தை வருகிறதா? என கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆட்டை தின்பதற்காக சிறுத்தை அங்கு வந்தது. அந்த நேரம் வசமாக அந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கி கொண்டது. கூண்டுக்குள் அகப்பட்ட உடன் சிறுத்தை பயங்கரமாக சத்தம் போட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர், ஊர் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். பிடிபட்ட சிறுத்தைக்கு சுமார் 6 வயது இருக்கும். கூண்டுக்குள் சிக்கியதால் ஆக்ரோஷமாக கத்தியபடி இருந்தது.
இதைத் தொடர்ந்து வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஜவளகிரி அருகே கர்நாடக எல்லையான சென்னமாலம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விட்டனர். 1½ ஆண்டுகளுக்கும் மேலாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.