விளையாட்டுத் துறையில் சாதனை படைப்போரின் எண்ணிக்கை உயர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
விளையாட்டுத் துறையில் சாதனை படைப்போரின் எண்ணிக்கை உயர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் துளசி மதி, மனிஷா, நித்யஸ்ரீ ஆகிய 3 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
"தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கேல் ரத்னா விருது பெற்ற குகேஷ், அர்ஜுனா விருது பெற்ற துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்!. தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.