'அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
தமிழக பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இதன் பின்னர் முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"தமிழகத்தில் அறிவிக்கபடாத அவசர நிலை நிலவுகிறது. இந்த வழக்கில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்த இன்னொரு நபர் யார் என்பதை ஏன் மறைக்கப் பார்க்கிறார்கள்? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்? என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று கவர்னரை சந்தித்து எங்கள் கருத்துகளை தெரிவித்தோம். இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தி.மு.க.வினரால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தமிழக முதல்-அமைச்சரோ, அல்லது துணை முதல்-அமைச்சரோ இந்த விவகாரம் தொடர்பாக ஏன் வாயை திறக்கவில்லை. விசாரணை முடிந்த பிறகு யார் அந்த சார்? என்பது தெரிந்துவிடும் என்று கனிமொழி எம்.பி. கூறுகிறார். ஆனால் விசாரணை சரியாக நடக்காது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம்.
திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண் தலைவர்கள் கைதாகிறார்கள், ஆனால் கைதாக வேண்டிய குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு.
சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே இங்கே உள்ள பாரபட்சமான நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படும். எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.