மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.;

Update:2025-01-06 20:01 IST

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளதாவது:-

மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து சீரிய நிர்வாகத்தை வழங்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் அடிப்படையில். பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் மக்களுடன் முதல்வர் திட்டம் 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக நகர்ப்புரங்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புர மக்களிடையே இத்திட்டம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து. ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முகாம்களில், 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, 44 அத்தியாவசிய பொதுச் சேவைகளான பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகள் வழங்கப்பட்டன. இதன் பலனாக, 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் அரசிற்கு உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இத்தகைய முயற்சிகள் நிலைநிறுத்தியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்